Ads Area

கல்முனையில் திடீர் சோதனை - 12 மோட்டார் சைக்கிள்களைக் கைப்பற்றிய பொலிஸார் - 93 பேருக்கு சட்டநடவடிக்கை.

 (பாறுக் ஷிஹான்).


அம்பாறை மாவட்டம், கல்முனை பிராந்தியத்தில் விசேட   போக்குவரத்து பொலிஸாரின் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, 12 மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 93 பேருக்கு சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இன்று மாலை இத்திடீர் சோதனை நடவடிக்கையானது   பெரிய நீலாவணைக்குட்பட்ட மருதமுனை மற்றும்  கடற்கரை வீதி போன்ற இடங்களில்  மேற்கொள்ளப்பட்டது.


இத்திடீர் சோதனையில் மோட்டார் சைக்கிள் ஆவணம், காப்புறுதி எதுவுமின்றி மோட்டார் சைக்கிளைச் செலுத்துவது, சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துவது, தலைக்கவசம் அணியாது செல்வது, ஒரு மோட்டார் சைக்கிளில் இருவருக்கு மேற்பட்டவர்கள் பயணிப்பது, அதிவேகமாகச்செல்வது, மிக ஒலி எழுப்பிய மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் கண்காணிக்கப்பட்டு தண்டப்பணம் விதிக்கப்பட்டு வீதி ஒழுங்குமுறை தொடர்பான ஆலோசனைகள்  பொலிஸாரினால் வழங்கப்பட்டன.


இச்சோதனை நடவடிக்கையானது, கிழக்கு மாகாண  சிரேஸ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் ஆலோசனையில் அம்பாறை  மாவட்ட பிரதிப்பொலிஸ் மாஅதிபர் சுஜித் வெதமுல்ல வழிகாட்டலில் அம்பாறை மாவட்ட  பொலிஸ் அத்தியட்சகர் டி.பி.எச்.கலனசிறி நெறிப்படுத்தலில் அம்பாரை மாவட்ட  கல்முனை பிராந்திய உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் தலைமையில்  இடம்பெற்றது.


இதன் போது, கல்முனை, சம்மாந்துறை, சவளைக்கடை, சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொலிஸார் இணைந்து  முக்கிய சந்திகள், பிரதான புறநகர வீதிகளில் திடீர் சோதனை நடவடிக்கை  மேற்கொண்டனர்.


குறிப்பாக, இச்சோதனை நடவடிக்கையின் போது 12 மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 93 பேருக்கு மேற்கூறிய குற்றங்களுக்காக தண்டப்பணம் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


இச்சோதனை நடவடிக்கையில் பெரிய நீலாவணை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி ஜே.எஸ்.கே.வீரசிங்க கல்முனை தலைமையக பொலிஸ்  மோட்டார் போக்குவரத்துப்பிரிவுப்பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான பி.ரி நஸீரும் பங்கேற்றிருந்தனர்.


இதே வேளை, அதிக ஒளி மற்றும் ஒலி எழுப்பும் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகள் பயன்படுத்தும் நபர்களுக்கெதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe