கரூர் துயர சம்பவத்தில் விஜய்யை கைது செய்யக் கோரி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக தகவல்கள் வெளியான நிலையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு எழுந்துள்ளது.
கரூரில் நடிகர் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் (த.வெ.க) தலைவர் விஜய் கலந்துகொண்ட அரசியல் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கோரமான கூட்ட நெரிசலில் பலியானோரின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. இது தமிழகத்தில் சமீபகாலத்தில் நடந்த மிக மோசமான கூட்ட நெரிசல் சம்பவங்களில் ஒன்றாகும்.
கடந்த சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில், கரூர் - ஈரோடு சாலையில் உள்ள வேலுசாமிபுரம் சந்திப்பில்தான் தவெக கூட்டம் நடந்தது. இது விஜய் கலந்து கொண்ட 'வெளிச்சம் வெளிவரட்டும்' என்ற பரப்புரைக் கூட்டம். இந்த கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டதில் 41 பேர் பலியாகிவிட்டனர். காயமடைந்த 60-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நெரிசலுக்கான காரணங்கள் (காவல்துறை முதல் தகவல் அறிக்கையின்படி) காவல்துறையின் முதல் தகவல் அறிக்கை (FIR) மற்றும் அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்தத் துயரத்திற்குப் பல காரணிகள் இணைந்து பங்களித்துள்ளன:
கூட்டத்தை தாமதப்படுத்தியது: விஜய் வருவதற்கு திட்டமிட்ட நேரமான மதியம் 12 மணியை விட, அவர் தாமதமாக மாலை 7:40 மணிக்கு வந்ததால், மக்கள் நீண்ட நேரம் கடும் வெயிலில் காத்திருந்தனர். இது சோர்வையும் சலசலப்பையும் ஏற்படுத்தியது.
அதிக கூட்டம்: நிகழ்ச்சிக்காக 10,000 பேர் வருவார்கள் என்று அனுமதி கோரப்பட்ட நிலையில், 25,000-க்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர். அனுமதியற்ற Road Show: அனுமதி பெறாத பல இடங்களில் விஜய்யின் வாகனம் நின்றதால், கூட்டம் மேலும் அதிகரித்து நெரிசல் ஏற்பட்டது.
உள்கட்டமைப்பு தோல்வி: திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் (த.வெ.க. அமைத்த ஜெனரேட்டர் பழுது அல்லது மின்தடை), கூட்டத்தில் பீதி ஏற்பட்டது. சில இடங்களில் தகரக் கூரைகள் மற்றும் மரங்கள் மீது ஏறியவர்கள் விழுந்ததால், கீழே இருந்தவர்கள் மீது விழுந்து நெரிசல் அதிகரித்தது.
முறையற்ற மேலாண்மை: வெப்பம், போதிய குடிநீர், உணவு மற்றும் மருத்துவ வசதிகள் இல்லாதது போன்ற ஏற்பாட்டுக் குறைபாடுகளை அமைப்பாளர்கள் கண்டும் காணாமல் இருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சட்ட நடவடிக்கை மற்றும் விசாரணை வழக்குப்பதிவு: கரூர் நகரக் காவல்துறையினர், த.வெ.க.வின் மாவட்டச் செயலாளர் மதியழகன், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் இணைச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் உட்பட கட்சிப் பொறுப்பாளர்கள் மீது உதாசீனத்தால் உயிரிழப்பை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விசாரணை ஆணையம்: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் கரூரில் துயர சம்பவம் நடந்த நிலையில் பொதுமக்களுக்கு துணையாக இருக்காமல் அந்த இடத்தை விட்டு சென்றார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்க என தனது தொண்டர்களுக்குக் கூட அறிவுறுத்தாமல் போனதால் விஜய் மீது பலருக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் 41 பேர் உயிரிழக்க காரணம் விஜய்தான் என்பதால் அவரை கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு மாணவர் சங்கம் சார்பில் சென்னை, கரூர், குளித்தலை, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக கிடைத்த தகவலை அடுத்து போலீஸார் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.