பாறுக் ஷிஹான்.
அம்பாறை மாவட்டம், நிந்தவூர் கரையோரப்பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக கடலரிப்பு அதிகரித்து வருகின்றமை தடுக்க இதுவரை எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என பாதிக்கப்பட்ட மீனவர்கள் விசனம் தெரிவித்தனர்.
நிந்தவூர் பிரதேசத்தில் நிரந்தரமாக கடலரிப்பைத்தடுக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுமெனவும் தற்போது தற்காலிகமாக கடலரிப்பைத்தடுக்க கடற்கரைப்பகுதியில் மண் மூட்டைகளினால் பாதுகாப்புச்சுவர் அமைப்பதற்கு விரைவாக நடவடிக்கை எடுப்பதாகவும் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கும் மற்றும் அவர்களின் மீன்வாடிகளை வேறு பிரதேசங்களுக்கு மாற்றுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்வதாக மாவட்ட கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவத்திணைக்கள அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்குறுதிகளை வழங்கி விட்டுச்சென்ற போதிலும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
குறித்த கடலரிப்பினால் மீன்பிடி வாடிகள் பாதிப்புற்று கடல் ஊடறுத்துச்செல்வதனால் கரையோரத்திலுள்ள 40 க்கும் அதிகமான தென்னை மரங்களும் அழிந்து விடும் அபாய நிலைமை ஏற்பட்டு வருவதுடன், மீன்பிடித்தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் கூறுகின்றனர்.
எனினும் மாவட்ட கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவத்திணைக்கள உயரதிகாரிகள், மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் நேரில் சென்று குறித்த கடலரிப்பு பிரதேசத்தினைப் பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.
நிந்தவூர் கரையோரப்பிரதேசத்தில் கடல் அலைகளாலும் நீரோட்டங்களாலும் கரையிலுள்ள மண் அல்லது பாறைகள் அரித்துச்செல்லப்படுவதை அவதானிக்க முடிகின்றது. இக்கடலரிப்பின் காரணமாக கடலோரப் பகுதிகள் அழிந்து மனித வாழ்விடங்களுக்கும் உட்கட்டமைப்புகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அத்துடன், கடற்கரையோரத்திலுள்ள நகரங்கள், பாலங்கள், வீடுகள் மற்றும் பிற கட்டடங்கள் சேதமடைகின்றன.
இதேவேளை, நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்பைத்தடுப்பதற்கு கருங்கல்லிலான அணைக்கட்டு நிர்மாணிப்பதற்கு கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவத் திணைக்களத்தால் கடந்த காலங்களில் முதற்கட்டமாக பல மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.