பாறுக் ஷிஹான்.
இளைஞர்களுக்கு நீண்டகாலமாக ஐஸ் போதைப்பொருளை விற்பனை செய்த டெட்டோ மல்லி என்ற இளைஞனைத்தேடி கைது செய்த கல்முனை விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அம்பாறை மாவட்டம், கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நற்பிட்டிமுனை எரிபொருள் நிலையத்திற்கருகிலுள்ள ஆலையடி வீதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஐஸ் போதைப்பொருளுடன் நடமாடிய சந்தேக நபரை நீண்டகாலமாக தேடிய கல்முனை விசேட அதிரடிப் படையினர் புதன்கிழமை (😎 மாலை கைது செய்துள்ளனர்.
கல்முனை விசேட அதிரடிப்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது 25 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைதானார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 1,520 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டிருந்ததுடன், சந்தேக நபர் உள்ளிட்ட சான்றுப்பொருட்கள் யாவும் சட்ட நடவடிக்கைக்காக கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கல்முனை விசேட அதிரடிப்படையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இக்கைது நடவடிக்கையானது விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மாஅதிபர் டி.ஜி.எஸ்.சமந்தவின் பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக்கட்டளை பதில் அதிகாரி பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.ஆர்.பி.கே.டி.ரத்னவீரவின் அறிவுறுத்தலுக்கமைய மட்டக்களப்பு வலய உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் பி.கே.என்.குலதுங்கவின் வழிகாட்டலில் கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பி.இஹலகேவின் தலைமையிலான விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.