அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதை விரைவுபடுத்துவது தொடர்பாக நேற்று (03) பிற்பகல் ஜனாதிபதி அலுலகத்தில் அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்து கொண்டார்.
இந் நிகழ்வில் அனர்த்தம் காரணமாக இழப்பீடு பெற தகுதியுள்ள அனைவருக்கும் இழப்பீடு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், எனவே, பணத்தை ஒரு தடையாக கொள்ளாமல், இழப்பீடு பெற தகுதியுள்ள அனைவருக்கும் இழப்பீடு வழங்க தேவையான தகவல்களை விரைவில் சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தியதுடன், துல்லியமான தரவுகளை விரைவாகப் பெற வேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
தரவுகளை சேகரிக்கும் போது இடம்பெறும் தாமதங்களைத் தவிர்ப்பதற்காக, வழக்கமான பொறிமுறைகளுக்கு அப்பால் சென்று ஒரு விசேட குழுவை நியமித்து, குறித்த பணிகளை செயற்திறனாகவும் விரைவாகவும் மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தியதுடன், தற்போது இடம்பெயர்ந்துள்ள மொத்த மக்கள் தொகை, அதில் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை, சேதமடைந்துள்ள வீடுகளின் எண்ணிக்கை, நெல், மரக்கறிகள் உள்ளிட்ட பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள சேதம், கால்நடை பண்ணைகள் உட்பட கால்நடை வளத்துறைக்கு ஏற்பட்டுள்ள சேதம் குறித்து விசேட கவனம் செலுத்துமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
ஊடகப்பிரிவு
ஜனாதிபதி செயலகம்.

