கிளிநொச்சி மாவட்டச் செயலக ஊழியர் நலன்புரிச்சங்கம், நவீன விவசாய முறையில் இரண்டாவது முறையாகவும் பயிரிடலை வெற்றிகரமாக முன்னெடுத்து வருகிறது.
அலுவலக சூழலை பசுமையாக மாற்றுவது, ஊழியர்களுக்கு மனநலன் மற்றும் பணித்திறனை அதிகரிக்கும் சூழலை உருவாக்குவது என்பனவற்றை இலக்காகக் கொண்டு, ஊழியர் நலன்புரிச் சங்கம் பல்வேறு விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
ஆரம்ப முயற்சியின் வெற்றியினை தொடர்ந்து அதன் தொடர்ச்சியாக பச்சை வீட்டினுள் தற்பொழுது ஒரு புறம் தக்காளி செடிகளும், மற்றொரு புறம் கறிமிளகாய் செடிகளும் பயிரிடப்பட்டு, முறையாக பராமரிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் கறிமிளகாய் செய்கையின் முதலாவது அறுவடை மேற்கொள்ளப்பட்டது. இவ் அறுவடை செயற்பாட்டில் மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்டச்செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள்,ஊழியர் நலன்புரிச்சங்கத்தினர்,உத்தியோகத்தர்கள் இணைந்து ஈடுபட்டனர்.
2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் UNDP நிறுவனத்தின் City Project நிதி பங்களிப்பில், பச்சை வீட்டமைப்பின் கீழ் பிளாட்டினம் வகை தக்காளிச்செடிகள் நவீன விவசாய முறையில் பயிரிடப்பட்டன. இந்த முயற்சி அதிக விளைச்சலை ஊழியர் நலன்புரிச்சங்கத்திற்கு பெற்றுக்கொடுத்திருந்தது.
பல்வகை பயிரிடல் மூலம் விளைச்சல் நிலைத்தன்மையை அதிகரிப்பதும், நவீன விவசாயத்தை ஊக்குவிப்பதும் இந்த முயற்சியின் நோக்கமாகும்.
கிளிநொச்சி மாவட்டச் செயலக ஊழியர் நலன்புரிச்சங்கத்தின் இந்த முயற்சியினை நவீன விவசாயத்தைக் கற்றுக்கொள்ள விரும்பும் விவசாயிகள், சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள்,பசுமை வீட்டு விவசாயத்தை முயற்சிக்க விரும்பும் இளைஞர்கள் நேரில் வருகைதந்து பார்வையிடுவதோடு பச்சை வீட்டு விவசாயம் தொடர்பான தொழில்நுட்பம், செலவீன-வருமான கணக்கீடு, பராமரிப்பு முறைகள், கலப்பு பயிரிடல் செயல்முறைகள் குறித்து நேரில் கற்றுக்கொள்ள முடியும்.
கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் கீழ்க்காணும் நேரங்களில் மாவட்டச் செயலக அலுவலக தோட்டத்திற்குச் சென்று பார்வையிடலாம்.
வார நாட்களில்: காலை 9.00 – பிற்பகல் 4.00 மணி
இடம்: கிளிநொச்சி மாவட்டச் செயலக அலுவலக தோட்டம்
கலந்துரையாடல்: தொழில்நுட்ப குழு / பராமரிப்பு குழு.
இந்த முயற்சி, மாவட்ட விவசாயிகளுக்கான திறன் வளர்ச்சிக்கும் நவீன விவசாய முறைகளின் பரவலுக்கும் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது.
மாவட்ட ஊடகப்பிரிவு
மாவட்டச்செயலகம்
கிளிநொச்சி





