(சர்ஜுன் லாபீர்)
நாட்டில் நிலவும் வறுமையை ஒழித்து, கிராமிய ரீதியில் பொருளாதார மேம்பாடு மற்றும் அபிவிருத்தியை உறுதி செய்யும் நோக்குடன், அரசாங்கத்தின் ‘பிரஜா சக்தி’ வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவிலும் ஆரம்பிக்கவுள்ளது.
அதனடிப்படையில் ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவிலும் உள்ள திட்டமிடல் பிரிவில் தனியான பிரிவு ஒன்றினை ஆரம்பிக்க வேண்டும் என அரசாங்கம் சுற்று நிருபம் மூலம் அறிவித்துள்ளது.
அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தில் முதன் முதலாக சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் பிரஜா சக்தி பிரிவு நேற்று (22) திறந்து வைக்கப்பட்டது.
சம்மாந்துறை பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கலாநிதி ஏ.எல்.எம் அஸ்லம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இத் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹமது ஹனீபா அவர்கள் கலந்து கொண்டு 'பிரஜா சக்தி' பிரிவினை திறந்து வைத்தார்.
இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் வீ.வாசீத் அஹமட்,இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர் (பயிற்சி) எம்.சத்திய செரூபன்,பிரதன முகாமைத்துவ சேவை அதிகாரி எஸ்.எம் முஸ்தபா உட்பட திட்டமிடல் பிரிவு உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




