குவைத்தின் அல் முட்லா பகுதியிலுள்ள தொழிலாளர் முகாமில் ஆங்கில புத்தாண்டு தினத்தில் பெண் வேடமிட்டு நடனமாடிய வைரலான வீடியோவில் தொடர்புடைய பல இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொது ஒழுக்கத்தை மீறியதற்காக குற்றவியல் பாதுகாப்புத்துறை இவர்களை கைது செய்துள்ளதாக கடந்த சனிக்கிழமை (03/01/26) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்தியில் உள்துறை தெரிவித்துள்ளது.
வீடியோவை வெளியிட்ட கணக்கின் உரிமையாளரை அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டார். விசாரணையின் போது, அந்தக் கணக்கு தனக்குச் சொந்தமானது என்றும், வீடியோவில் இருந்தவர்கள் வீடியோ படமாக்கப்பட்டபோது தன்னுடன் இருந்தனர் என்றும் அவர் ஒப்புக்கொண்டார். அதைத் தொடர்ந்து, வீடியோவில் தோன்றிய அனைவரும் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அப்பாசியாவில் உள்ள தனியார் பள்ளியில் தேர்வு காலம் முடிவடைந்ததை தொடர்ந்து சொகுசு கார்களைப் பயன்படுத்தி சாலையில் மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதத்தில் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டும் சாகசங்களை நிகழ்த்திய இந்திய இளைஞர்களை (மாணவர்களை) குவைத்திலிருந்து நாடு கடத்த உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்த நிலையில், இந்த புதிய செய்தி வெளியாகியுள்ளது.
வளைகுடா நாடுகளில் மூன்றாவது பாலினத்தவர்களுக்கு இதுவரை அதிகாரப்பூர்வமாக அங்கிகாரம் கிடையாது என்பது குறிப்படத்தக்கது. அதேபோல் வளைகுடா நாடுகளில் மூன்றாவது பாலினத்தவர்கள் தொடர்புடைய காட்சிகள் உடைய படங்களை திரையிட கூட அனுமதி இல்லை என்பதும் குறிப்படத்தக்கது.

