நூருல் ஹுதா உமர.
அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழை காரணமாக விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் முன்னணியின் பிரதித்தலைவரும், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினருமான எம்.ஏ.நளீர் தெரிவித்துள்ளார்.
அவரின் ஊடக அறிக்கையில்,
அறுவடை செய்யப்பட்ட நெல் மழையால் உரிய முறையில் உலர்த்த முடியாத நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக நெல் முளை விடத் தொடங்கியுள்ளதுடன், பெருமளவிலான விளைச்சல் பயன்பாடற்றதாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் பல்வேறு வேளாண்மை நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
“கடந்த அரசாங்கங்கள் செய்தது போல, ஈர நெல்லை கிலோ 100 ரூபாய்க்கு அரசாங்கம் உடனடியாக கொள்வனவு செய்திருந்தால் இவ்வாறான இழப்புகள் தவிர்க்கப்பட்டிருக்கும். தற்போதைய அரசாங்கம் அதற்கான முன் ஏற்பாடுகளை செய்யத்தவறியதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்” என அவர் குற்றஞ்சாட்டினார்.
மேலும் தற்போதைய அரசாங்கம் ஈர நெல்லை விவசாயிகளிடமிருந்து உடனடியாக கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தனார்.
தற்போதைய அவசரநிலையைக் கருத்திற்கொண்டு, அனுரகுமார திசாநாயக்க மற்றும் கே.டி.லால் காந்த ஆகியோர் நேரடியாக தலையிட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடி நஷ்டயீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் எம்.ஏ.நளீர் வலியுறுத்தினார்.
விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ள இச்சூழ்நிலையில், அரசாங்கம் அவசர நிவாரணத்திட்டமொன்றை அறிவித்து, ஈர நெல் கொள்வனவு மற்றும் வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.




