Ads Area

நெல்லை வீதியில் உலர விட்டு விபத்தை உண்டாக்கும் விவசாயிகள் - பாதிக்கப்பட்ட பொதுமக்கள் விசனம்.

 பாறுக் ஷிஹான்.


அம்பாறை மாவட்டத்தில் தற்போது நெல் அறுவடை ஆரம்பித்துள்ள நிலையில், மீண்டும் பெய்து வரும் அடைமழையினால் நெல்லை பிரதான வீதிகள் மற்றும் உள்ளக வீதிகளில் உலர விடுவதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதைக்காண முடிகின்றது.


அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர், சம்மாந்துறை, கல்முனை, நாவிதன்வெளி, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, சொறிக்கல்முனை, சவளக்கடை, மத்தியமுகாம்  ஆகிய பிரதேசங்களிலுள்ள பிரதான வீதிகள், உள்ளக வீதிகளில் இச்செயற்பாடு தொடர்கதையாகவே உள்ளது.


அம்பாரை மாவட்டத்தில் நெல் அறுவடை தற்போது மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், அறுவடை செய்யப்பட்ட நெல்லை சந்தைப்படுத்துவதற்கு முன் விவசாயிகள் ஈரப்பதமான நெற்களை உலர விடுவதற்காக இச்சட்டவிரோதச்செயற்பாட்டில் ஈடுபடுகின்றனர்.


போதியளவு நெல் உலர விடும் தளமின்மையால் வீதியில் தாம் இவ்வாறு உலர விடும் நிலைமையை எதிர்நோக்கியுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.


இவ்வாறு மூட்டை மூட்டைகளாக வீதிகளில் நெற்களை குவித்து உலர விடுவதனால் வீதியில் விபத்துச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு ஒரு பக்க வீதியைத்தடை செய்து நெல் உலர விடுவதனால் போக்குவரத்துக்கான வீதி தடைப்படுவதுடன், வீண் விபத்துக்களுக்கும் காரணமாகவுள்ளன.


தனிப்பட்ட சுயலாபத்திற்காக இவ்வாறு வீதிகளைப் பயன்படுத்தவது தண்டனைக்குரிய குற்றமாகும் என பாதிக்கப்பட்டவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.


எனவே, இவ்வாறான சட்ட விரோதமாக வீதிகளில் நெற்களை உலர விடுபவர்களுக்கெதிராக பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் நடவடிக்கையெடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்படுகின்றது.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe