டுபாய்க்கு அருகில் செவ்வாய்க்கிழமை அதிகாலை, முழுமையாக மூல எண்ணெய் ஏற்றிச் சென்ற குவைத் கொடியுடன் இயங்கிய “அல்-சல்மி” (Al-Salmi) என்ற எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலில் கப்பலில் தீப்பற்றியதும், அதன் உடல் பகுதியில் சேதமும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (Kuwait Petroleum Corporation) தெரிவித்ததாவது, இந்த தாக்குதல் அதிகாலை நேரத்தில் நடந்ததாகவும், கப்பலில் தீ ஏற்பட்டதாகவும் கூறியுள்ளது.
டுபாய் அதிகாரிகள் பின்னர் தெரிவித்ததாவது, ட்ரோன் தாக்குதலால் ஏற்பட்ட தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகும். மேலும், இந்த சம்பவத்தில் எண்ணெய் கசிவு அல்லது உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும், கப்பலில் இருந்த 24 பேரும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் கூறினர்.
முன்னதாக, இந்த தாக்குதலால் எண்ணெய் கசிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக குவைத் பெட்ரோலியம் நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருந்தது என்று குவைத் அரசின் செய்தி நிறுவனம் KUNA தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தின் கடல் வர்த்தக அமைப்பு (UKMTO) தகவலின்படி, டுபாய்க்கு வடமேற்கில் சுமார் 31 கடல் மைல் தொலைவில் இந்த கப்பல் தாக்கப்பட்டது.
கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானை தாக்கியதைத் தொடர்ந்து, பெர்சியக் வளைகுடா மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தக கப்பல்களுக்கு எதிராக ஏவுகணைகள் மற்றும் வெடிகுண்டு ட்ரோன்கள் மூலம் பல தாக்குதல்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
செய்தி மூலம் - https://saudigazette.com.sa
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.

