இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால், வெளிநாடுகளில் தொழில் புரியும் மற்றும் தொழிலை முடித்துத் திரும்பிய பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் விசேட நிகழ்வு நேற்று (14) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறையாகப் பதிவு செய்து தொழிலுக்குச் சென்றவர்களின் 94 பிள்ளைகள் இதன்போது தெரிவு செய்யப்பட்டனர். தலா 10,000 ரூபா பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் அடங்கிய பொதிகள் மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இந்த நலத்திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா மற்றும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்துகொண்டு உபகரணங்களை வழங்கி வைத்தனர்.
மேலும், திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ஜெ. ஸ்ரீபதி, மாவட்ட பிரதி திட்டமிடல் பணிப்பாளர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகள், துறைசார்ந்த அதிகாரிகள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
வெளிநாடுகளில் பணிபுரிந்து நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்யும் தொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்வித் தரத்தை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த உதவித் திட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
District Media Unit
Trincomalee.

