சம்மாந்துறையில் உணவகங்கள் மீது அதிரடி சுகாதாரப் பரிசோதனை: விதிமீறல்களில் ஈடுபட்டோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் வழிகாட்டலில், சம்மாந்துறை சுகாதாரப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள இரவு நேர உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளை இலக்கு வைத்து (27) விசேட திடீர் சுகாதாரப் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
பொதுமக்களுக்கு சுகாதாரமான உணவுகளை வழங்குவதை உறுதிப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்தத் திடீர் சோதனையானது, நான்கு விசேட குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, குறித்த பிரதேசத்திலுள்ள 42 உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
சோதனையின் போது, சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றாத, அசுத்தமான சூழலில் உணவு தயாரித்த மற்றும் முறையற்ற வகையில் உணவு கையாளப்பட்ட பல உணவகங்கள் அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டன. இத்தகைய சுகாதார விதிமீறல்களில் ஈடுபட்ட உணவகங்களுக்கு எதிராகப் சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த அதிரடி சோதனையில் மாவட்ட சிரேஷ்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர், உணவு மற்றும் மருந்துப் பரிசோதகர், மற்றும் சம்மாந்துறை சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவைச் சேர்ந்த பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
பொதுமக்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் நோக்கில், இவ்வாறான திடீர் சுகாதாரப் பரிசோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என சுகாதாரத் துறையினர் மேலும் அறிவித்துள்ளனர்.
தகவல் - MOH Sammanthurai
செய்தி வடிவம் - சம்மாந்துறை அன்சார்.




