சம்மாந்துறை அன்சார்.
அண்மையில் வெளியான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளில், கலைப்பிரிவில் சிறந்த பெறுபேற்றினைப் பெற்று மாவட்ட ரீதியில் 07ம் இடத்தினையும் பெற்று சட்டத்துறைக்குள் நுழையும் அளவுக்கு சாதனை படைத்த மாணவன் புஹாரி முஹம்மத் ஷிஹாப்பை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் இம்டாட் விளையாட்டுக் கழகம் நடாத்தியது.
கழகத்தின் நிருவாகிகள், சக வீரர்கள் மற்றும் சமூக முக்கியஸ்தர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில், சாதனையாளர் ஷிஹாப் அவர்களுக்குக் கழகத்தின் சார்பில் நினைவுப் பரிசுகள் வழங்கியும் கௌரவங்கள் அளிக்கப்பட்டன.
இம்டாட் கழகத்தின் நட்சத்திர கிரிகட் வீரரான புஹாரி முஹம்மத் ஷிஹாப் விளையாட்டுத் துறையில் மட்டுமல்லாது, கல்வித் துறையிலும் தனது திறமையை நிரூபித்துள்ளார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய கழகப் பொறுப்பாளர்கள், விளையாட்டு வீரர்கள் எப்போதும் சுறுசுறுப்பாகவும், திட்டமிடப்பட்ட முறையிலும் செயற்படுவதால் கல்வியிலும் சிறந்து விளங்க முடியும் என்பதற்கு ஷிஹாப் ஒரு சிறந்த முன்னுதாரணம் என்று குறிப்பிட்டனர்.
இன்றைய இளைஞர் தலைமுறையினர் மத்தியில் கல்வி மற்றும் விளையாட்டு ஆகிய இரண்டையும் சமமான முக்கியத்துவத்துடன் முன்னெடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறான கௌரவிப்பு நிகழ்வுகளைத் தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாகக் கழக நிருவாகத்தினர் தெரிவித்தனர்.
விளையாட்டுத் திறமையையும், கல்வியறிவையும் ஒரே புள்ளியில் கொண்டுவந்து சாதனை படைத்துள்ள புஹாரி முஹம்மத் ஷிஹாப் அவர்களுக்கு, இம்டாட் விளையாட்டுக் கழகம் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் பலரும் தமது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.



