Ads Area

சம்மாந்துறை மஜீட்புரத்தில் யானை தாக்கி குடும்பப் பெண் பலி: பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசாங்க அதிபர் நேரில் சென்று நட்டஈடு வழங்கல்!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மல்வத்தை - 03, மஜீத்புரம் பகுதியில் காட்டு யானைத் தாக்குதலுக்குள்ளாகி குடும்பப்பெண் ஒருவர் உயிரிழந்த துயரச் சம்பவம் புதன்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. 


குறித்த பிரதேசத்திலுள்ள தனது வீட்டின் முன்னால் அதிகாலை வேளையில் நின்றிருந்த போதே, திடீரென ஊடுருவிய காட்டு யானை இவரைத் தாக்கியுள்ளது. இத்தாக்குதலில் மூன்று பிள்ளைகளின் தாயான அபூபக்கர் சபீனா பேகம் (வயது 48) என்ற பெண்ணே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.


உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறவும், இழப்பீட்டு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தவும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் அனுபமா மங்கள விக்ரமாராச்சி அவர்கள் இன்று (08) உயிரிழந்தவரின் இல்லத்திற்கு நேரடி விஜயம் ஒன்றை மேற்கொண்டார். 


சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மது ஹனீபா அவர்களின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்த விஜயத்தின்போது, வனஜீவராசிகள் திணைக்களத்தினால் வழங்கப்படும் ஒரு மில்லியன் ரூபாய் (10 இலட்சம்) நட்டஈட்டுத் தொகையின் முதற்கட்டமாக, ஒரு இலட்சம் ரூபாய்க்கான காசோலை அரசாங்க அதிபரினால் உயிரிழந்தவரின் குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டது. எஞ்சிய தொகையை மிக விரைவில் வழங்குவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு இதன்போது உத்தியோகத்தர்களுக்கு அரசாங்க அதிபர் பணிப்புரை விடுத்தார். 


இந்நிகழ்வில் மாவட்ட பிரதம கணக்காளர் ஏ.எல். மஹ்ரூப், சம்மாந்துறை பிரதேச செயலக கணக்காளர் எஸ்.எல். சர்தார் மிர்ஸா, பிரஜா சக்தி குழுத் தவிசாளர்கள், சம்பந்தப்பட்ட கிராம உத்தியோகத்தர் உட்பட  பலரும் கலந்துகொண்டனர். 


சம்மாந்துறை மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமப்புறங்களில் கடந்த சில காலமாக காட்டு யானைகளின் நடமாட்டம் சடுதியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக உயிர்ச் சேதங்கள் ஏற்படுவதுடன், பயிர்களும் பெருமளவில் சேதமடைந்து வருகின்றன. என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe