Ads Area

சம்மாந்துறை தவிசாளர் மாஹிர் கனடா விஜயம், இடைக்கால தவிசாளராக வெள்ளையன் வினோகாந்த் நியமனம்.

சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் திரு. மாஹிர் அவர்கள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை கனடா தேசம் நோக்கி மேற்கொண்டுள்ளமையினால், பதில் தவிசாளராக உப தவிசாளர் திரு. வெள்ளையன் வினோகாந்த அவர்கள் கடந்த 09.04.2026 முதல் உத்தியோகபூர்வமாக பதில் தவிசாளராக கடமையினை பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார். 


சம்மாந்துறை பிரதேச சபை வரலாற்றில் தமிழ் கிராமத்தில் இருந்து சபைக்கு தெரிவு செய்யப்பட்டிருக்கும் ஒருவர் பதில் தவிசாளராக கடமை  ஏற்று செயல்படுவது இதுவே முதல் தடவையாகும். திரு. திருமதி. வெள்ளையன் அருந்ததி தம்பதிகளின் மூத்த புதல்வன் திரு.வெள்ளையன் வினோகாந்த அவர்கள் அம்பாறை,சம்மாந்துறை,புதிய வளத்தாப்பட்டி கிராமத்தினை பூர்வீகமாக கொண்டவராவார். 


இவர் ஐக்கிய மக்கள் சக்தியின் பொத்துவில் தொகுதியின், தொகுதி அமைப்பாளராக நீண்ட பல ஆண்டுகளாக செயல்பட்டு வருவதுடன் கடந்த 2019,2024 ஆம் ஆண்டுகளில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக பாராளுமன்ற தேர்தலிலும் ஒரு தமிழ் வேட்பாளராக போட்டியிட்டிருந்தமை  குறிப்பிடத்தக்க விடயமாகும். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் இலங்கை நாட்டின் எதிர்க்கட்சித் தலைவருமாகிய கௌரவ சஜித் பிரேமதாச அவர்களின் தமிழ் சிங்கள மொழி பெயர்பாலராக வடகிழக்கில் வளம் வருபவருமாவார். 


சம்மாந்துறை பிரதேச சபையின் இடைக்கால தவிசாளராக கடமை ஏற்றிருக்கும் கௌரவ தவிசாளர் திரு. வெள்ளையன் வினோகாந்த் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், தன்னை நம்பி இப்பொறுப்பினை ஒப்படைத்த கௌரவ தவிசாளர் திரு. மாஹிர் அவர்களுக்கும், சபையில் ஏகமனதாக இத்தீர்மானத்தினை அங்கீகரித்த அனைத்து கௌரவ உறுப்பினர்களுக்கும் நன்றி கூறுவதோடு, தான் செயல்பட உள்ள கால எல்லைக்குள் சபையின் உயரிய கௌரவத்தினை பேணிப் பாதுகாக்கும் வகையிலும், சபையினூடாக தங்கள் தேவைகளை நிவர்த்தி செய்ய வரும் பயனாளிகளின் விண்ணப்பங்களை முடிந்த விதத்தில் நிவர்த்தி செய்வதிலு அர்ப்பணிப்புடனும் நேர கால வரையறையின்றி செயல்பட உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe