(மின்மினி மின்ஹா)
மனித நேய சேவையின் முன்னணிப் போராளிகளாக திகழும் தாதியர்களை கௌரவிக்கும் வகையில், சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிறப்பு நிகழ்வு (12) உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி வைத்தியர் டி. பிரபா சங்கர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது தாதியர்களின் தன்னலமற்ற சேவை, நோயாளிகளுக்கான அக்கறை, சுகாதாரத் துறையில் அவர்கள் ஆற்றிவரும் முக்கிய பங்கு ஆகியவை பாராட்டப்பட்டதுடன், அவர்களின் அர்ப்பணிப்பு சமூகத்தின் நம்பிக்கையை உயர்த்துகின்றது எனவும் குறிப்பிடப்பட்டது.
நிகழ்வில் திட்டமிடல் வைத்திய அதிகாரி ஏ.ஆர். நியாஸ் அஹ்மத், பிரதம தாதிய பரிபாலகி திருமதி சாஜிதா எம். ஜமீல், தாதிய பரிபாலகி திருமதி எம்.சி.எஸ். சமாயிலா, விடுதி முகாமையாளர்களான பி. சந்திரகுமார் மற்றும் ஆர்.எஸ். இஸ்முனா, தாதிய சங்க செயலாளர் திருமதி எம்.சி.எம். பரீஸ், தர முகாமைத்துவ பிரிவு பொறுப்பு தாதிய உத்தியோகத்தர் எம்.ஐ.எம். அஸ்ஹர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், சிறப்பாக சேவையாற்றிய தாதியர்கள் வைத்தியர் டி. பிரபா சங்கர் அவர்களினால் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், அவர்களின் சேவையை தொடர்ந்து ஊக்குவிக்கும் வகையிலும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.
தாதியர்களின் மனிதாபிமான சேவையை நினைவுகூர்ந்த இந்நிகழ்வு, சுகாதாரத் துறையில் அவர்களின் பங்களிப்பு அளப்பரியது என்பதையும் மீண்டும் எடுத்துக்காட்டியதாக அமைந்தது.


