Ads Area

சம்மாந்துறையில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு!


(சர்ஜுன் லாபீர்) 


இன்றைய சமூகத்தின் பெரும் சவாலாக உருவெடுத்துள்ள போதைப்பொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தி, வருங்காலத் தலைமுறையினரை அதிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று புதன்(13) சம்மாந்துறையில் நடைபெற்றது.


சமுர்த்தி திணைக்களத்தின் அனுசரணையுடன் நடைபெற்ற இந்நிகழ்வு, பிரதேச செயலக போதைப்பொருள் தடுப்பு மற்றும் புனர்வாழ்வு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஜே.எம். இக்ராம் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மது ஹனீபா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார். இதன்போது உரையாற்றிய அவர், 


போதைப்பொருள் எனும் அரக்கனைச் சமூகத்திலிருந்து வேரறுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், குறிப்பாக மிக இளம் வயதிலேயே குழந்தைகளின் நற்பண்புகளை வளர்ப்பதில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு இருக்கும் பொறுப்புகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.

தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் வட-கிழக்கு மாகாண இணைப்பாளர் எம்.எம். ரசாட் அவர்கள் இதில் பிரதம வளவாளராகப் பங்கேற்றார். அவர் தனது உரையில், 


போதைப்பொருட்களால் ஒரு தனிமனிதனுக்கு ஏற்படும் உடல் மற்றும் உள ரீதியான பாதிப்புகள், சமூகச் சீரழிவுகள் மற்றும் அதிலிருந்து இளம் சந்ததியினரை எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்பது தொடர்பான தெளிவான விளக்கங்களை வழங்கினார். 

குழந்தைகளின் ஆரம்பகால வளர்ச்சியில் ஆசிரியர்களின் அவதானிப்பு மிக முக்கியமானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த விழிப்புணர்வு நிகழ்வில் சமுர்த்தி முகாமையாளர் எம். முபாரக், முன்பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எச். சம்றினா சியாம் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடன் பிரதேசத்தைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியைகளும் கலந்து கொண்டனர். 


​குழந்தைகளின் ஆரம்பகால வழிகாட்டிகளாக இருக்கும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு இவ்வாறான விழிப்புணர்வு வழங்கப்படுவது, போதைப்பொருள் அற்ற சமூகத்தை உருவாக்குவதற்கான ஒரு காத்திரமான ஆரம்பமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe