சம்மாந்துறை அல்-அஸ்ஹர் மகா வித்தியாலயத்தில் இன்று (20) மாணவர்களுக்கான பாடசாலை மருத்துவ ஆய்வு (SMI) மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகள் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றன. சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி (MOH) டொக்டர் (திருமதி) நிஸ்ரீன் ஜியாத் அவர்களின் தலைமையிலான மருத்துவக் குழுவினரால் இந்நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
மாணவர்களின் ஆரோக்கியமான எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நாளின் முக்கிய அங்கமாக, தரம் 1, 4, 7 மற்றும் 10 ஆகிய வகுப்புகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு முழுமையான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, மாணவர்களுக்கான நோய் எதிர்ப்புத் தடுப்பூசி வழங்கும் திட்டமும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இதன் கீழ், தரம் 6 பெண் மாணவிகளுக்கு கருப்பை வாய் புற்றுநோய் எதிர்ப்புக்கான (HPV) தடுப்பூசியும், தரம் 7 மாணவ, மாணவிகளுக்கு தொண்டை அழற்சி மற்றும் ரணஜன்னிய எதிர்ப்புக்கான (aTd) தடுப்பூசியும் வழங்கப்பட்டன.
மேலும், தரம் 9 மற்றும் 10 வகுப்புப் பெண் மாணவிகளின் வளர்ச்சிப் பருவத்தைக் கருத்திற்கொண்டு, அவர்களுக்கு அவசியமான "கட்டிளமைப் பருவம் தொடர்பான சுகாதாரக் கல்வி" வழிகாட்டல்களும் ஆலோசனைகளும் மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி (AMOH) அவர்களினால் விசேடமாக வழங்கி வைக்கப்பட்டன.
இந்நாளின் அனைத்து மருத்துவ மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகளும் மிக நேர்த்தியாகவும் வெற்றிகரமாகவும் நிறைவடைவதற்கு, தங்களின் முழுமையான ஒத்துழைப்பினை நல்கிய பாடசாலை அதிபர் மற்றும் வகுப்பு ஆசிரியைகள் அனைவருக்கும் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி (MOH) குழுவினர் தங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
தகவல் - MOH Sammanthurai.



