ஜலீல் ஜீ சம்மாந்துறை ( நிருபர்)
அரசின் காணி பகிர்ந்தளிப்பு மற்றும் ஏனைய நடவடிக்கைகள் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கும் e-SLIMS (Estate Land Information Management System) முறைமையானது, தற்போது இலங்கையில் காணி ஆணையாளர் நாயக திணைக்களத்தின் நடவடிக்கைகளில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தியுள்ளது.
காணி பகிர்ந்தளிப்பு, அனுமதிப்பத்திரம் வழங்கல், தரவுப் பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையான நிர்வாக நடைமுறைகள் ஆகியவற்றை இலகுபடுத்தும் நோக்கில் இம்முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக கிழக்கு மாகாண காணி நிர்வாக திணைக்களத்தின் உதவி காணி ஆணையாளர் கே.எல்.எம். முஸ்ம்மில் அவர்கள் வழங்கிய விரிவான விளக்கங்கள் வருமாறு:
கேள்வி: e-SLIMS முறைமை எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?
பதில்: 2009ஆம் ஆண்டில் மேல்மாகாணத்தில் காணிகளுக்கான குத்தகை அறவீட்டு நடவடிக்கைகளை இலகுபடுத்தும் நோக்கில் இந்த இலத்திரனியல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் இதனை முழுநாட்டுக்கும் விரிவுபடுத்தும் வகையில் முறையான ICT நிறுவனத்தின் மூலம் 2014 / 2015ஆம் ஆண்டுகளில் மேலும் மேம்படுத்தல்கள் செய்யப்பட்டன.
கேள்வி: இம்முறைமை மூலம் எவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன?
பதில்: ஆரம்பத்தில் காணி குத்தகை அறவீட்டு (Lease Recovery) நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட இந்த முறைமை, பின்னர் காணி பகிர்ந்தளிப்பு (Land Alienation), உத்தரவுப் பத்திரங்கள் (Permit) வழங்கல், அளிப்பு (Grant) வழங்கல், அரச திணைக்களங்களுக்கு காணி (Handing Over) வழங்கல், பல்வேறு நோக்கங்களுக்காக நீண்ட கால குத்தகை (Long term lease) வழங்கல், உள்ளூராட்சி நிறுவனங்கள் மற்றும் தேசிய வீடமைப்பு அதிகாரசபை போன்ற நிறுவனங்களுக்கு காணி (Vesting) வழங்கல் போன்ற நடவடிக்கைகளை முழுமையாக e-SLIMS முறைமை ஊடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கேள்வி: பொதுமக்களுக்கு எவ்வகையில் காணிகள் வழங்கப்படுகின்றன?
பதில்: பொதுமக்களுக்கு காணி பகிர்ந்தளிக்கும் போது பிரதானமாக இரண்டு சட்டங்கள் கையாளப்படுகின்றன. அதில் ஒன்று காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டம் (Land Development Ordinance), மற்றையது அரச காணிச் சட்டம் (State Lands Ordinance) ஆகும். இவ்விரு சட்டங்களும் காணி பகிர்ந்தளிக்கும் நோக்கங்களுக்கு ஏற்ப வேறுபடுகின்றன.
கேள்வி: அவை எவ்வாறு வேறுபடுகின்றது?
பதில்: காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டம் (Land Development Ordinance) விசேடமாக உழவர் வகுப்பினருக்கு காணி வழங்குவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. இச்சட்டத்தின் மூலம் உழவர் வகுப்பினருக்கு இலவசமான முறையில் காணி பகிர்ந்தளிக்கப்படுகிறது. இவர்களுக்கு குடியிருப்பு தேவைக்காக 20 பேர்சஸ்க்கும், தோட்டம் மற்றும் குடியிருப்புக்கு 80 பேர்சஸ் வரைக்கும், விவசாய நடவடிக்கைகளுக்காக ஒரு ஏக்கரும் வழங்கப்படுகின்றன.
கேள்வி: அரச காணிச் சட்டம் ஊடாக யாருக்கு காணி பகிர்ந்தளிக்கப்படுகிறது?
பதில்: உழவர் வகுப்பினர் தவிர்ந்த பல்வேறு தரப்பினருக்கும், பல்வேறு தேவைகளுக்கும் இச்சட்டத்தின் கீழ் காணி வழங்கப்படுகிறது. குறிப்பாக பாரிய முதலீட்டு நோக்கங்கள், தொழிற்சாலைகள் அமைப்பதற்கு, பாரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கும், நகர சபை மற்றும் மாநகர சபை எல்லைகளுக்குள் குடியிருப்புகளுக்கும், அரச திணைக்களங்கள் மற்றும் ஏனைய அதிகார சபைகள் ஆகியோருக்கு இச்சட்டத்தின் கீழ் காணிகள் வழங்கப்படுகின்றன.
கேள்வி: e-SLIMS முறைமையின் முக்கிய நன்மைகள் எவை?
பதில்: e-SLIMS முறைமை அரச காணி நிர்வாகத்தை முழுமையாக நவீனமயமாக்கியுள்ளதுடன், பொதுமக்களுக்கும், அதிகாரிகளுக்கும் பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. முக்கியமாக காணி தொடர்பான சேவைகள் காலதாமதமின்றி மேற்கொள்ளப்படும்.
செய்தி ஆதாரம்: ( தினகரன் வாரமஞ்சரி, ஞாயிறு மே 24, 2026)

