Ads Area

சம்மாந்துறையில் பாடசாலை மாணவர்களுக்கு சம்மாந்துறை MOH யினால் தடுப்பூசிகள் வழங்கப்பட்டது.

சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பாடசாலைகளில் மாணவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் சுகாதார வேலைத்திட்டங்கள் மற்றும் உணவுப் பாதுகாப்பு தொடர்பான சட்ட நடவடிக்கைகள்  (07) முன்னெடுக்கப்பட்டன.


இஸ்மாயில்புர தாஹிரா வித்தியாலயம் மற்றும் மஜீத்புரா மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் மாணவர்களுக்கான விசேட தடுப்பூசி ஏற்றும் நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன்போது, தரம் 6 இல் கல்வி பயிலும் பெண் மாணவிகளுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் தடுப்புக்கான HPV (Human Papillomavirus) தடுப்பூசியின் முதலாவது டோஸ் வழங்கப்பட்டது.


அதேவேளை, தரம் 7 இல் பயிலும் மாணவ, மாணவிகள் அனைவருக்கும் வளர்ந்தோருக்கான ஏற்புத்தடை தடுப்பூசி (aTd - Adult Tetanus and Diphtheria) வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, பாடசாலைகளில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சத்துணவின் தரம் மற்றும் சுகாதாரம் குறித்தும் அதிகாரிகளால் விரிவாக ஆராயப்பட்டது.


இதேவேளை, உணவுப் பாதுகாப்பு சட்டத்தை அமுல்படுத்தும் நோக்கில் சம்மாந்துறை பகுதியில் இவ்வாரம் மேற்கொள்ளப்பட்ட விசேட உணவுப் பரிசோதனைகளின் போது, விதிமுறைகளை மீறிய 4 வியாபார நிலையங்களுக்கு எதிராக சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.


உரிய லேபிள்கள் இன்றி பொருட்களை விற்பனை செய்தமை (Labelling issues) மற்றும் சுகாதாரமற்ற முறையில் உணவுகளை கையாண்டமை (Insanitary conditions) போன்ற குற்றச்சாட்டுகளின் கீழேயே இவ்வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.


தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம், மூன்று வர்த்தக நிலையங்களுக்கு தலா 25,000/- ரூபா வீதம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. அத்துடன், மற்றுமொரு வழக்கு எதிர்வரும் திகதிக்கு (Calling date) ஒத்திவைக்கப்பட்டது.


"சுகாதாரமான சமூகம் - எமது இலக்கு" என்ற தொனிப்பொருளில் பொதுமக்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த இவ்வாறான சோதனைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என சுகாதார அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர்.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe