கடந்த 2015ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தப்பட்டு, கூட்டு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு பேரின் மரண தண்டனையை உயர் நீதிமன்றம் இன்று (மே 06, 2026) உறுதி செய்துள்ளது.
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான சுவிஸ் குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிகுமார் உள்ளிட்ட நான்கு பேருக்கு விதிக்கப்பட்ட தண்டனையே இவ்வாறு உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் (Trial-at-Bar), இந்தக் குற்றவாளிகள் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாகக் கூறி அவர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
மேல் நீதிமன்றத்தின் அந்தத் தீர்ப்பை எதிர்த்து பிரதிவாதிகள் தரப்பால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுக்களை பரிசீலித்த உயர் நீதிமன்றம், கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பில் தலையிட வேண்டிய அவசியமில்லை எனக் கூறி அதனை உறுதிப்படுத்தியது.
பின்னணி:
யாழ்ப்பாணம் புங்குடுதீவு மகாவித்தியாலயத்தில் கல்வி கற்ற 18 வயதுடைய வித்யா, 2015 மே மாதம் பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்த போது கடத்தப்பட்டு, மிகக் கொடூரமான முறையில் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார்.
இந்தச் சம்பவம் அக்காலகட்டத்தில் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளையும், மக்கள் போராட்டங்களையும் உருவாக்கியிருந்தது. சுமார் 11 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று இந்த வழக்கின் இறுதிக்கட்டத் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

