கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் (RDHS) பிரிவிற்குட்பட்ட பாடசாலைகளில், நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளின் அடிப்படையில் மிகச்சிறந்த மூன்று "சுகாதார மேம்பாட்டுப் பாடசாலைகள்" (Health Promoting Schools) தெரிவு செய்யப்பட்டுள்ளன. இந்தத் தெரிவில், சம்மாந்துறை ஸ்ரீ கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயம் மிகச்சிறந்த ஒரு பாடசாலையாகத் தெரிவு செய்யப்பட்டு பிராந்திய மட்டத்தில் சாதனை படைத்துள்ளது.
இப்பரிந்துரையின் தரநிலைகளை நேரில் பரிசோதனை செய்வதற்காக, கொழும்பு குடும்ப சுகாதார பணியகத்திலிருந்து (Family Health Bureau) வருகை தந்த உயர் அதிகாரிகள் குழுவினர் இன்று பாடசாலைக்கு விசேட கள விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். இதன்போது, பாடசாலை மாணவர்களின் ஆரோக்கியத்தை தொடர்ச்சியாகக் கண்காணிக்கும் நோக்கில், வருகை தந்த உயர் அதிகாரிகள் குழுவினரால் மாணவர்களின் நிறை மற்றும் உயரத்தைப் பரிசோதிக்கும் நவீன கருவி (Weight & Height Measuring Scale) ஒன்று பாடசாலைக்கு அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.
சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி (MOH) டொக்டர் திருமதி நிஸ்ரின் ஸியாத் (Dr. Mrs. Nisreen Ziyadh) அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், MOMCH டொக்டர் டேனியல் (Dr. Daniel), SPHID லபீர் (Lafeer), PHI தினேஷ் (Dhinesh) உள்ளிட்ட சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மாணவர்களின் ஆரோக்கியமான எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டும், தூய்மையான மற்றும் சுகாதாரமான கற்றல் சூழலை உருவாக்குவதற்கும் அர்ப்பணிப்புடன் உழைத்த சம்மாந்துறை ஸ்ரீ கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் பிராந்திய சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் அனைவருக்கும் பலரும் தமது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
தகவல் - MOH Sammanthurai
செய்தி - சம்மாந்துறை அன்சார்.

