சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட புளோக் ஜே கிழக்கு-03 கிராம உத்தியோகத்தர் பிரிவில், 44 பயனாளிகளுக்கான காணிக்கச்சேரி (காணி மக்கள் நீதிமன்றம்) இன்று (09) முற்பகல் 9.00 மணியளவில் கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில் நடைபெற்றது.
காணி உத்தியோகத்தர் ஐ.எல். லாபீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்குச் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மது ஹனீபா பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.
இக்காணிக்கச்சேரியின் போது மக்களுக்குத் தேவையான காணி உரிமங்கள் மற்றும் சட்ட நடைமுறைகள் குறித்து பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மது ஹனீபா விரிவான விளக்கங்களை வழங்கினார்.
அரசாங்கக் காணிகளை நீண்டகாலமாகப் பயன்படுத்தி வரும் தகுதியான மக்களுக்கு, சட்டப்பூர்வமான காணி அனுமதிப்பத்திரங்களை (சுவற் பத்திரம்) பெற்றுக்கொடுப்பதே இக்காணிக்கச்சேரியின் முதன்மை நோக்கம் என்று குறிப்பிட்ட அவர், காணி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு விண்ணப்பித்துள்ள நபர்களின் தகைமைகள் மற்றும் அவர்களின் உண்மையான தேவையைக் கண்டறிந்து, தகுதியானவர்களுக்கு மட்டுமே இந்த உரிமங்கள் முறையாகப் பகிர்ந்தளிக்கப்படும் என்றார்.
மேலும், பொதுமக்கள் தமக்கு ஒதுக்கப்படும் அரச காணிகளை முறையான வழிகளில் அபிவிருத்தி செய்ய வேண்டுமே தவிர, சட்டவிரோதமான முறையில் பிறருக்கு விற்பனை செய்யவோ அல்லது கைமாற்றவோ கூடாது என்றும் வலியுறுத்தினார். காணிப் பிரச்சினைகளால் மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் குறைத்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த மக்கள் நீதிமன்றம் கிராம மட்டத்திலேயே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட பிரதேச செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்களினால் மக்களின் சந்தேகங்களுக்கு விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இக்காணிக்கச்சேரி பிற்பகல் 1.00 மணியளவில் சுமுகமான முறையில் நிறைவடைந்தது.
இந்நிகழ்வில் காணி உத்தியோகத்தர் எம். நிஸாப்தீன், குடியேற்ற உத்தியோகத்தர் ஏ.எச். ஹாரீப், கிராம உத்தியோகத்தர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

