Ads Area

RRDP திட்டத்தின்கீழ் சம்மாந்துறையில் 4 கிராமிய வீதிகள் புனரமைப்பு: ஒப்பந்தகாரர்களுக்கு பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் அறிவுரை!

சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வீரமுனை-04 (கோயில் 4ஆம் குறுக்குத் வீதி), மலையடிக்கிராமம்-01 (உக்கர் வீதி), மலையடிக்கிராமம்-02 (முஸ்தாக் அலி வீதி) மற்றும் செந்நெல் கிராமம்-02 (RDS வீதி) ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் சுமார் 1.4 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின்கீழ், கிராமிய வீதி அபிவிருத்தி திட்டத்தின் (RRDP) மூலமாக நான்கு முக்கிய கிராமிய வீதிகளின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 


இதுதொடர்பான வேலைகளை மேற்கொள்ளும் ஒப்பந்தகாரர்களுடனான விசேட கலந்துரையாடல் கடந்த வெள்ளிக்கிழமை (05)பிரதேச செயலாளரின் அறையில் இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மது ஹனீபா அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கமைய, பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கலாநிதி ஏ.எல். முஹம்மது அஸ்லம் தலைமையில் இக் கலந்துரையாடல் நடைபெற்றது. 


இதன்போது ஒப்பந்தக்காரர்களுக்கு முக்கிய அறிவுரைகள் சில வழங்கப்பட்டன. குறிப்பாக, கிராமிய மக்களின் போக்குவரத்து அசௌகரியங்களை விரைந்து போக்கும் வகையில், ஒதுக்கப்பட்டுள்ள அரச நிதிக்கு அமைய, தரமான மூலப்பொருட்களைப் பயன்படுத்தி வீதிகள் நீண்டகாலம் பாவனைக்கு உகந்ததாக அமைக்கப்பட வேண்டும் எனவும், கட்டுமானப் பணிகள் நடக்கும் போது அப்பகுதி மக்களின் அன்றாடப் போக்குவரத்திற்குப் பாதிப்பு ஏற்படாதவாறு தற்காலிக வழிமுறைகளைக் கையாள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. 


அத்தோடு, இப்புனரமைப்புப் பணிகள் அனைத்தும் இம்மாதம் 30ஆம் திகதிக்குள் முழுமையாக நிறைவடைந்து, கொடுப்பணவுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என விசேடமாகக் குறிப்பிடப்பட்டது. மேலும், எமது காரியாலய தொழில்நுட்ப உத்தியோகத்தர் மற்றும் சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள் இவ்வீதி வேலைகளைத் தொடர்ச்சியாக மேற்பார்வை செய்வார்கள் எனவும், திட்டத்தில் முழுமையான வெளிப்படைத்தன்மையைப் பேணும் நோக்கில், வீதியின் ஒவ்வொரு 100 மீற்றருக்கும் தலா 3 பேரைக் கொண்ட ஒரு சமூக மட்டக் கணக்காய்வுக் குழு நியமிக்கப்பட்டு வீதிப் புனரமைப்பு நடவடிக்கைகள் தீவிரமாகக் கண்காணிக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.


இந் நிகழ்வில் சம்மாந்துறை "கிளீன் ஸ்ரீ லங்கா" செயற்திட்ட இணைப்பாளரும்,சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினருமான வை.பி.எம் நவாஸ்,பிரதம முகாமைத்துவ சேவை அதிகாரி எஸ்.எம் முஸ்தபா,பிராஜ சக்தி சமூக அபிவிருத்திக் குழு தவிசாளர்கள்,திட்டமிடல் பிரிவு உத்தியோகத்தர்கள், சமூக வலூவூட்டல் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe