(சர்ஜுன் லாபீர்)
சர்வதேச புகைத்தல் போதை எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு, தற்கால சமூகத்தின் பெரும் சவாலாக உருவெடுத்துள்ள போதைப்பொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில் விசேட விழிப்புணர்வு கருத்தரங்கொன்று நேற்று (01) சம்மாந்துறையில் நடைபெற்றது.
சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட மட்டக்களப்புத் தரவை-2 கிராம சேவகர் பிரிவில், சமுர்த்தி சமுதாய மட்ட உறுப்பினர்களுக்காக இவ்விழிப்புணர்வு கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சமுர்த்தி திணைக்களத்தின் அனுசரணையுடன், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ. அப்துல் ரகுமான் அவர்களின் தலைமையில் அல் முனீர் வித்தியாலயத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மது ஹனீபா அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன், தற்போதைய சூழலில் போதைப்பொருள் ஒழிப்பின் அவசியம் மற்றும் சமூகத்தின் பொறுப்புகள் குறித்து விசேட உரையாற்றினார். மேலும், இந்நிகழ்வின் போது சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, விசேட புகைத்தல் எதிர்ப்பு கொடி பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிதிகளுக்கு அணிவிக்கப்பட்டதோடு, கொடி விற்பனையும் செய்து வைக்கப்பட்டது.
இக்கருத்தரங்கில் பிரதம வளவாளராகத் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் வட-கிழக்கு மாகாண இணைப்பாளர் எம்.எம். ரசாட் அவர்கள் பங்கேற்றிருந்தார். அவர் போதைப்பொருட்களால் ஏற்படும் உடல், உள மற்றும் சமூகப் பாதிப்புகள் குறித்தும், அதிலிருந்து எமது இளம் தலைமுறையினரை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்தும் விரிவான மற்றும் தெளிவான விளக்கங்களைச் சமுதாய மட்ட உறுப்பினர்களுக்கு வழங்கினார்.
இந்நிகழ்வில் சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.பி.எம். ஹுசைன், சமுர்த்தி முகாமையாளர் எம். முபாரக், பிரதேச செயலக போதைப்பொருள் தடுப்பு மற்றும் புனர்வாழ்வு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஜே.எம். இக்ராம், சமுர்த்தி முகாமையாளர்கள், பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.




