சம்மாந்துறை அஸ்-ஸிராஜ் சமுர்த்தி வங்கியின் அனைத்து நிதி மற்றும் கணக்கு நடவடிக்கைகள் அனைத்தும், பாரம்பரிய பதிவேட்டு முறையிலிருந்து (Manual System) முழுமையாக கணினிமயப்படுத்தப்பட்டு, இன்றைய தினம் முதல் ஒன்லைன் (Online System) சேவைக்கு மாற்றப்பட்டுள்ளன.
இதற்கான உத்தியோகபூர்வ கடிதம் வழங்கும் நிகழ்வு நேற்று (03) சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மது ஹனீபா அவர்களின் தலைமையில், அஸ்-ஸிராஜ் சமுர்த்தி வங்கி வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக மக்களின் சேவைகளை விரைவுபடுத்தும் இந்த ஒன்லைன் திட்டத்தின் உத்தியோகபூர்வ அனுமதிப் பத்திரம், பிரதேச செயலாளர் அவர்களினால் வங்கியின் முகாமையாளர் எம்.எம். முஹம்மது முபாரக் அவர்களிடம் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.
இந்த புதிய ஒன்லைன் முறையினூடாக, சமுர்த்தி பயனாளிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிப் பரிவர்த்தனைகளை மிகவும் துரிதமாகவும், துல்லியமாகவும், பாதுகாப்பான முறையிலும் பெற்றுக்கொள்ள முடியும். நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமின்றி, வெளிப்படைத்தன்மையுடன் சேவைகளை வழங்க இந்த டிஜிட்டல் மயமாக்கல் வழிவகுக்கும் என இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
இந்நிகழ்வில் சம்மாந்துறை சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எம்.பி.எம். ஹுசைன், வங்கி நடவடிக்கைகளை ஒன்லைன் சேவைக்கு மாற்றும் மாவட்ட ரீதியான திட்டப் பொறுப்பாளர், ஏனைய சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் வங்கி உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



