சம்மாந்துறை அன்சார்.
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் மருத்துவச் சேவைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், சீன அரசாங்கத்தின் நிதி அனுசரணையுடன் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டிடத் தொகுதி நேற்று (2026.06.08) உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
இப்புதிய கட்டிடத் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான வார்ட் (Pediatric Ward) மற்றும் விசேட சிசு பராமரிப்புப் பிரிவு (Special Care Baby Unit - SCBU) என்பன இதன்போது மக்கள் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டன.
வைத்தியசாலை அத்தியட்சகர் டொக்டர் டி.பிரபாசங்கர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா பிரதம அதிதியாகவும், கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr. திருமதி சகீலா இஸ்ஸடீன் கௌரவ அதிதியாகவும் கலந்துகொண்டு புதிய பிரிவுகளை நாடாவை வெட்டித் திறந்து வைத்தனர்.
இந்நிகழ்வில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர்கள், பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி உள்ளிட்ட வைத்தியர்கள், தாதியர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இதேவேளை, புதிய கட்டிடத்தில் அமையப் பெற்றுள்ள ஏனைய பிரிவுகள் மற்றும் சத்திரசிகிச்சைக் கூடங்களையும் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் பிராந்திய பணிப்பாளர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு, அவற்றின் தரம் குறித்துக் கேட்டறிந்தனர். அதனைத் தொடர்ந்து, வைத்தியசாலையின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினருடன் அதிதிகள் விரிவான கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.
நவீன மருத்துவ வசதிகளுடன் சர்வதேசத் தரத்திற்கு இணங்க அமைக்கப்பட்டுள்ள இப்புதிய பிரிவுகள் மூலம், சம்மாந்துறை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் வாழும் குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் புதிதாகப் பிறக்கும் சிசுக்கள் இனிவரும் காலங்களில் மிகவும் தரமிக்க, பாதுகாப்பான சிகிச்சை மற்றும் பராமரிப்பு சேவைகளைப் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இத்தகைய நவீன மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகள் இப்பகுதி மக்களின் நீண்டகால சுகாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்வதில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் எனப் பலராலும் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.





