தகவல்: மஜீட் ARM
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் ஒரு சில தாதிமார்களின் சிடுசிடுப்பான அணுகுமுறை மற்றும் நோயாளிகள் மீதான அலட்சியப் போக்கு குறித்து, அப்பகுதி பொதுமக்களும் நோயாளிகளும் தங்களது கடுமையான அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தி, சமூக வலைத்தளங்கள் வாயிலாகப் பகிரங்கக் கோரிக்கைகளும் விடுக்கப்பட்டு வருகின்றன.
தற்போதைய சூழலில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் பௌத்த மதத்தைச் சேர்ந்த தாதிமார்கள், நோயாளிகளை மிகவும் அன்போடும் அர்ப்பணிப்போடும் கவனித்து வருவதாக பொதுமக்கள் மனதாரப் பாராட்டியுள்ளனர். நோயாளிகளின் வலியை உணர்ந்து அவர்கள் காட்டும் மனிதநேயமிக்க அக்கறையானது, அங்குள்ள ஏனைய தாதிமார்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்வதாக சமூக வலைத்தளப் பதிவுகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும், அதே வைத்தியசாலையில் கடமையாற்றும் அனைத்து தாதிமார்களையும் ஒட்டுமொத்தமாகக் குறிப்பிடாமல், அங்கு கடமையாற்றும் ஒரு சில தமிழ் மற்றும் முஸ்லிம் தாதிமார்களின் சேவையில் மட்டுமே இத்தகைய பெரும் குறைபாடுகள் காணப்படுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தங்களை நம்பி வரும் நோயாளிகளிடம் கனிவாகப் பேசுவதை விடுத்து, சினத்துடனும் சிடுசிடுப்புடனும் குறிப்பிட்ட சில தாதிமார்கள் நடந்துகொள்வது வழக்கமாகிவிட்டதாக பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
வெறும் கடமைக்காக வந்து போகும் இத்தகைய தாதிமார்களின் அணுகுமுறையை உடனடியாக மாற்றியமைக்க வேண்டும் என்றும், நோயாளிகளை எவ்வாறு கனிவுடன் கையாள்வது என்பது குறித்து, அங்கு முன்மாதிரியாகச் செயற்படும் பௌத்த தாதிமார்களிடம் இருந்து இவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களால் வலியுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, இந்த விடயத்தில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை நிர்வாகம் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் உடனடியாகத் தலையிட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. நோயாளிகளிடம் அலட்சியமாக நடந்துகொள்ளும் அந்த ஒரு சில தாதிமார்களுக்கு எதிராக உரிய ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கடமை உணர்வுடன் செயற்படக்கூடிய பௌத்த தாதிமார்களைப் போன்ற அர்ப்பணிப்புள்ள ஊழியர்களை அதிகளவில் சேவைக்கு அமர்த்தி வைத்தியசாலையின் தரத்தை உயர்த்த முன்வர வேண்டும் என்றும் பொதுமக்கள் பகிரங்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

.jpg)