Ads Area

அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியின் உப பீடாதிபதியாக சம்மாந்துறை எம்.ரீ.எம். முஸம்மில் நியமனம்!

ஆக்கம்: கியாஸ் ஏ. புஹாரி

அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியின் நிதி மற்றும் நிர்வாகத்திற்கான புதிய உப பீடாதிபதியாக சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ரீ.எம். முஸம்மில் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த மே மாதம் 25ஆம் திகதி (25.05.2026) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த உயர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.


சம்மாந்துறை மண்ணைச் சேர்ந்த பல மாணவர்களுக்கும், இன்றைய இளைஞர்களுக்கும் தமிழ் மொழியின் மீது பேராசை கலந்த ஈர்ப்பை ஏற்படுத்திய பெருமை முஸம்மில் ஆசிரியரையே சாரும். பாடசாலைக் காலங்களில் இவரது தமிழ் வகுப்பு என்றாலே மாணவர்களிடையே அதீத ஆர்வம் தொற்றிக்கொள்ளும்.


'மங்கையர்க்கரசியின் காதல்', 'கம்பராமாயணம்', 'ஒட்டக்கூத்தரின் தெத்துக்கூத்துகள்' போன்ற இலக்கியங்களையும், கடினமான இலக்கணங்களையும் தனது தனித்துவமான உடல் அசைவுகள், பாடச் சுருக்க இயை விசைகள் மூலம் சுவாரஸ்யமாகக் கற்பித்தவர். அத்தோடு, பல மாணவர்களின் ஒழுக்க மாண்புகளுக்கு வழிகாட்டியாகவும் அவர் திகழ்ந்துள்ளார்.


இந்த நியமனத்தின் மிக முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால், உப பீடாதிபதி எம்.ரீ.எம். முஸம்மில் அவர்கள் அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரியின் முதலாவது அணியின் (First Batch) மாணவர் ஆவார்.


1992 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் திகதி அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரி திறந்து வைக்கப்பட்டது. அதன் திறப்பு விழாவிற்கு ஐந்து நாட்களுக்கு முன்பதாக, மே 5 ஆம் திகதி முதலாவது மாணவர் குழு உள்வாங்கப்பட்டது. அந்த வரலாற்றுப் பட்டியலில் எம்.ரீ.எம். முஸம்மில் அவர்களின் சுட்டெண் (Index Number) P/08 என்பது குறிப்பிடத்தக்கது. தான் கல்வி கற்ற அதே கல்லூரிக்கு இன்று உப பீடாதிபதியாக அவர் உயர்ந்துள்ளமை கல்லூரிக்கும், அவர் கற்பித்த பாடசாலைகளுக்கும், சம்மாந்துறை மண்ணுக்கும் பெருமிதத்தை சேர்த்துள்ளது.


ஆரவாரமில்லாமலும், பெயர் புகழுக்கு ஆசைப்படாமலும் கல்விப் புலத்தில் அவர் கடந்து வந்த படிமுறைப் பாதையின் சுருக்கம்:


1995: தனது முதலாவது ஆசிரியர் நியமனத்தைப் பெற்று சம்மாந்துறை செந்நெல் சாஹிரா முஸ்லிம் வித்தியாலயத்தில் பணியை ஆரம்பித்தார்.


1995 - 1998: சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் (தேசிய பாடசாலை) ஆசிரியராகக் கடமையாற்றினார்.


2008:SLPES எனும் உயர் நிலைக் கல்வித் தகமையுடன் 'தர்கா டவுன்' கல்விக் கல்லூரியில் விரிவுரையாளராக இணைந்தார்.


2012: தர்கா டவுன் கல்விக் கல்லூரியின் கல்வியின் தர மேம்பாட்டு இணைப்பாளராக (Quality Assurance Coordinator) நியமிக்கப்பட்டார்.


2014: மட்டக்களப்பு கல்விக் கல்லூரியின் விரிவுரையாளராகப் பொறுப்பேற்றார்.


அடுத்த கட்டம்: தன்னை ஒரு ஆசிரியராக உருவாக்கிய அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரிக்கே சிரேஷ்ட விரிவுரையாளராக தடம் பதித்தார்.


2018: அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரியின் விரிவுரை இணைப்பாளராக (Lecture Coordinator) பணியாற்றினார்.


2025: கல்லூரியின் தர மேம்பாட்டு கல்வி இணைப்பாளராக நியமிக்கப்பட்டார்.


2026 (மே 25): அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரியின் நிதி மற்றும் நிர்வாகப் பிரிவு உப பீடாதிபதியாக (Vice President) பதவியுயர்வு பெற்றுள்ளார்.


மிகவும் எளிமையான முறையில், இத்தனை பதவிகளையும் அர்ப்பணிப்புடன் வகித்து வரும் உப பீடாதிபதி எம்.ரீ.எம். முஸம்மில் அவர்களுக்கு, அவரிடம் கல்வி கற்ற பழைய மாணவர்களும், கல்விச் சமூகமும் தமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.


அவர் விரைவில் இதே கல்லூரியின் பீடாதிபதியாக (President) உயர்வு பெற வேண்டும் என்பதே அனைவரதும் பிரார்த்தனையாகும்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe