சம்மாந்துறை அன்சார்.
சம்மாந்துறை மத்திய வட்டாரத்திற்குட்பட்ட கருவாட்டுக்கல், அம்பாறை முதலாம் வீதி மக்களின் நீண்டகால வடிகான் பிரச்சினைக்கு தற்போது நிரந்தர தீர்வு காணப்பட்டுள்ளது. கடந்த 10 வருடங்களாக இப்பகுதி மக்கள் எதிர்நோக்கி வந்த பெரும் அவதி, இந்த சீரமைப்புப் பணிகளின் மூலம் முடிவுக்கு வந்துள்ளது.
கருவாட்டுக்கல் முதலாம் வீதியில் அமைந்திருந்த வடிகான் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாகப் பலத்த சேதமடைந்த நிலையில் காணப்பட்டது. இதனால், மழைக்காலங்களில் வடிகானில் நீர் தேங்கி, வீதிகள் வெள்ளக்காடாக மாறுவது வழக்கமாக இருந்தது. இது அப்பகுதி மக்களின் போக்குவரத்துக்கும் அன்றாட வாழ்வாதாரத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாகவும், சுகாதார சீர்கேடாகவும் அமைந்து வந்தது.
இப்பகுதியின் இந்த நீண்ட நாள் கோரிக்கையை சம்மாந்துறை பிரதேச சபையின் கவனத்திற்குக் கொண்டு சென்று, அதனை நிவர்த்தி செய்ய தொடர் முயற்சிகளை மேற்கொண்டவர் கௌரவ பிரதேச சபை உறுப்பினர் ஹாதிக் இப்றாஹிம் ஆவார். இவரது அயராத முயற்சியின் காரணமாக, இந்த வடிகானை முழுமையாகச் சீரமைப்பதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டன.
பொதுமக்களின் இந்த அத்தியாவசியத் தேவையை உணர்ந்து, உடனடியாக அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் கௌரவ ஐ. எல். எம். மாஹிர் அவர்களுக்கும், இப்பிரச்சினையை சபைக்குக் கொண்டு சென்ற பிரதேச சபை உறுப்பினர் ஹாதிக் இப்றாஹிம் அவர்களுக்கும், அத்தோடு களத்தில் நின்று இப்பணியை செவ்வனே முடித்துக் கொடுத்த சபை ஊழியர்களுக்கும் கருவாட்டுக்கல் முதலாம் வீதி மக்கள் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.
இந்த சீரமைப்புப் பணியின் மூலம் இப்பகுதி மக்கள் தற்போது நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.





