சம்மாந்துறை அன்சார்.
காயங்கள் தடுப்பு வாரத்தின் (Injury Prevention Week 2026) முதலாவது நாளான இன்று, சம்மாந்துறை சுகாதாரப் பிரிவின் ஊடாக வீதிப் போக்குவரத்து விபத்துகளால் ஏற்படும் காயங்களைத் தடுப்பதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மிகச் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டன.
வீதி விபத்துகளுக்கு மிக முக்கிய காரணமாக அமையும் ஐந்து ஆபத்தான நடத்தைகள் குறித்து பொதுமக்களின் கவனத்தை ஈர்ப்பதே இந்த விழிப்புணர்வுப் பிரசாரத்தின் பிரதான நோக்கமாகும். அதனடிப்படையில், வேகம் விவேகமானது அல்ல, அது விபத்திற்கே வழிவகுக்கும் என்பதால் 'அதிவேகத்தைத்' தவிர்த்தல், உயிர்களைப் பணயம் வைக்கும் 'மது அருந்தி வாகனம் செலுத்துதலைக்' கட்டுப்படுத்துதல், உயிர்க்கவசமான 'தலைக்கவசம் அணிய வேண்டியதன்' அவசியத்தை உணர்த்துதல், பயணத்தின் போது எப்போதும் 'ஆசனப்பட்டை (Seat-belt) அணிவதை' வலியுறுத்துதல் மற்றும் செல்லக்குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் 'சிறுவர் இருக்கை கட்டுப்பாடுகளைப்' புறக்கணிக்காமல் பின்பற்றுதல் ஆகிய ஐந்து முக்கிய விடயங்கள் குறித்து மக்களுக்கு விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
"சாலை விதிகளை மதிப்போம், விபத்தில்லா சமூகத்தை உருவாக்குவோம்" என்ற முழக்கத்துடன், பொதுமக்களின் ஒவ்வொரு பயணமும் பாதுகாப்பானதாக அமைய வேண்டும் என்பதே இந்த விழிப்புணர்வு நடவடிக்கையின் இறுதி இலக்காகும் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.



