கொழும்பு மேல்நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில், முதன்முறையாக இலங்கையிலுள்ள மேல்நீதிமன்ற வலயங்களுக்கிடையிலான 5 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட அறுவர் பங்கேற்கும் “லோர்ட்ஸ் ஒப் த பிட்ச்” ஜனாதிபதி சட்டத்தரணி எட்லி பெரேரா ஞாபகார்த்த சம்பியன்ஸ் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி, 2026 ஜூலை 11 ஆம் திகதி (சனிக்கிழமை) கொழும்பு டி.எஸ். சேனநாயக்க மைதானத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது.
நாடு முழுவதிலுமிருந்து 22 மேல்நீதிமன்ற வலய அணிகள் பங்கேற்ற இத்தொடரில், வட மாகாணத்திலிருந்து ஒரு அணியும், கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்திய ஒரே அணியாக கல்முனை மேல்நீதிமன்ற வலயத்தைச் சேர்ந்த சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்க அணியும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.
சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்க அணியின் தலைவரும் பயிற்சியாளருமான சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஸ்தபா அவர்களின் தலைமையிலும், அணியின் முகாமையாளர்களான சிரேஷ்ட சட்டத்தரணிகள் ஏ.எம். நசீல் மற்றும் ஏ.எச். அறூஸ் ஆகியோரின் சிறந்த திட்டமிடல் மற்றும் வழிநடத்தலின் கீழும், அணி தொடக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியில் ஏனைய வீரர்களான ஏ.எம்.தாயிர், ஏ.எம்.அம்ஜாத், ஏ.எம்.பிர்னாஸ், யூ.எல்.சமீம், எஸ்.எம்.பி.எம்.றிசாட், ஏ.ஜே.எம்.நவாஸ் ஆகியோரும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
நாக்அவுட் (Knockout) முறையில் நடைபெற்ற போட்டித் தொடரில், சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்க அணி தனது முதல் போட்டியில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் “குரோன் வொரியர்ஸ்” அணியை எதிர்கொண்டு வெற்றிபெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் கம்பஹா ஸ்ட்ரைக்கர்ஸ் அணியை எதிர்கொண்டு அதிக ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் கொழும்பு டைட்டன்ஸ் அணியை தோற்கடித்து அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. மிகுந்த விறுவிறுப்புடன் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் மஹர சட்டத்தரணிகள் சங்க அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
இறுதிப் போட்டியில் கொழும்பு கோர்ட் கிங்ஸ் மேல்நீதிமன்ற அணியை எதிர்கொண்ட சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்க அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிபெற்று, ஜனாதிபதி சட்டத்தரணி எட்லி பெரேரா ஞாபகார்த்த சம்பியன்ஸ் கிண்ணத்தை முதன்முறையாக கைப்பற்றி, 2026 ஆம் ஆண்டுக்கான சம்பியன்ஸ் பட்டத்தை வென்றது.
இவ்வெற்றியுடன், அணிக்கு ரூ. 250,000/- பணப்பரிசும், ஜனாதிபதி சட்டத்தரணி எட்லி பெரேரா நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டன.
மேலும், போட்டித் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஏ.எம். தாயிர், போட்டியின் சிறந்த ஆட்டக்காரர், போட்டித் தொடரின் நாயகன் மற்றும் சிறந்த பந்துவீச்சாளர் ஆகிய மூன்று விருதுகளையும் வென்று சாதனை படைத்தார். அவருக்கு நினைவுச் சின்னங்களுடன் தலா ரூ. 25,000/- பெறுமதியான மூன்று காசோலைகளும் வழங்கப்பட்டன.
அதேவேளை, அனைத்துத் துறைகளிலும் சிறப்பாகப் பங்களித்த ஏ.எம். அம்ஜத், சிறந்த சகலதுறை ஆட்டக்காரருக்கான பணப்பரிசையும் நினைவுச் சின்னத்தையும் பெற்றுக்கொண்டார்.
மிகவும் சிறப்பான திட்டமிடல் மற்றும் ஒழுங்கமைப்புடன் நடைபெற்ற இந்நிகழ்வில், கௌரவ கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதிளான மஞ்சுள திலகரத்ன மற்றும் லால் பண்டார கௌரவ சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி பாரிந்த ரணசிங்க, ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர். டி. சில்வா, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நளின் டி. சில்வா, கொழும்பு மேல்நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர், செயலாளர் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு போட்டியை சிறப்பித்தனர்.
இவ்வெற்றி, சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும், கல்முனை மேல்நீதிமன்ற வலயத்திற்கும் மட்டுமல்லாது, முழுக் கிழக்கு மாகாண சட்டத்துறையினருக்கும் பெருமை சேர்த்துள்ள வரலாற்றுச் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.




