Ads Area

சவுதி அரேபியா ஜித்தாவில் போதைப்பொருள் விநியோகம்: இலங்கை நாட்டவர் ஒருவர் கைது!

சம்மாந்துறை அன்சார்.


சவூதி அரேபியாவின் ஜித்தாவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஆபத்தான மெத்தாம்பெட்டமைன் (Methamphetamine) எனப்படும் 'ஷாபு' (Shabu) போதைப்பொருளை சட்டவிரோதமான முறையில் விநியோகம் செய்து வந்த இலங்கை நாட்டவர் ஒருவர் ஜித்தா காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.


நாட்டின் பாதுகாப்பிற்கும், பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கும் அச்சுறுத்தலாக விளங்கும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனைக்கு எதிராக சவூதி பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, ஜித்தாவில் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட சோதனையின் போது, சந்தேகத்திற்கு இடமான முறையில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டிருந்த இந்த இலங்கை வதிவிடவாசி (Resident) பிடிபட்டார். அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த குறிப்பிட்ட அளவிலான ஷாபு போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


கைது செய்யப்பட்ட நபருக்கு எதிராக முதற்கட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணை மற்றும் தகுந்த நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக அவர் தற்போது பொது வழக்குத் துறையிடம் (Public Prosecution) ஒப்படைக்கப்பட்டுள்ளார். சவூதி அரேபியாவில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனைக்கு எதிராக கடுமையான சட்டங்கள் அமலில் உள்ள நிலையில், இத்தகைய சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக பாரிய தண்டனைகள் வழங்கப்படும் என அதிகாரிகள் மீண்டும் எச்சரித்துள்ளனர்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe