Ads Area

சம்மாந்துறையில் திருட்டு, போதைப்பொருள் சம்பவங்கள் அதிகரிப்பு: பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை அவசர வேண்டுகோள்!

சம்மாந்துறை பிரதேசத்தில் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனை மற்றும் திருட்டுச் சம்பவங்கள் பாரியளவில் அதிகரித்து வருவதாக சம்மாந்துறை பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை கவலை வெளியிட்டுள்ளதுடன், பொதுமக்கள் இது குறித்து மிகுந்த விழிப்புடன் செயற்படுமாறு அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.


குறிப்பாக, சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, ஏனைய பள்ளிவாசல் நிர்வாகங்கள் மற்றும் பொதுமக்கள் வழங்கிய தகவல்களின்படி, பிரதேசத்தில் பல சட்டவிரோத குற்றச் செயல்கள் பதிவாகியுள்ளன. குறிப்பாக, புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடுகளுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து, அங்கிருந்த மின்வயரிங் இணைப்புகளை திருடிச் செல்வதோடு, கட்டிடங்களுக்கும் கடுமையான சேதங்களை விளைவிக்கும் சம்பவங்கள் தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக நம்பிக்கையாளர் சபை சுட்டிக்காட்டியுள்ளது.


இதற்கு மேலாக, அப்பகுதியில் போதைப்பொருள் பாவனை மற்றும் அதன் விற்பனை மிகத் தீவிரமாக அதிகரித்துள்ளதுடன்; கால்நடைகள், மோட்டார் சைக்கிள்கள், சொகுசு வாகனங்கள், நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு தொடர்ச்சியான திருட்டுச் சம்பவங்கள் அரங்கேறி வருவதாக பொலிஸ் தரப்புத் தகவல்களை மேற்கோள் காட்டி சபை எச்சரித்துள்ளது.


எனவே, பொதுமக்கள் அனைவரும் தங்களது பெறுமதிமிக்க சொத்துக்களை மிகவும் பாதுகாப்பான முறையில் வைத்திருக்குமாறும், தத்தமது பகுதிகளில் நடமாடும் சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது சட்டவிரோத குற்றச் செயல்கள் தொடர்பான துல்லியமான தகவல்கள் ஏதேனும் கிடைத்தால், அதனை உடனடியாக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு அறியத்தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன், இந்த சமூகச் சீரழிவுகளைத் தடுத்து, குற்றவாளிகளுக்கு எதிராக பொலிஸார் மேற்கொள்ளும் அனைத்து சட்ட நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் தங்களின் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் பலமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe