(மின்மினி மின்ஹா)
அம்பாறை மாவட்ட செயலகத்தின் ஏ.டி. விக்ரம் கேட்போர் கூடத்தில் (28) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், இறக்காமம் பிரதேச சபையின் பிரதி தவிசாளரும் சட்டத்தரணியுமான கே.எல்.எம். சமீம், இறக்காமம் பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களில் நிலவும் தாமதங்கள் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டிய பல்வேறு விடயங்களை முன்வைத்தார்.
ஒப்பந்தப் பணிகளுக்கான கச்சேரி ரேட் நாட்டில் நிலவும் விலைத்தலம்பல்களுக்கு ஏற்ப அடிக்கடி மாற்றமடைந்தாலும், அவை உரிய காலத்தில் ஒப்பந்தக்காரர்களுக்கு அறிவிக்கப்படாததால் அபிவிருத்திப் பணிகள் தாமதமடைவதாக அவர் தெரிவித்தார்.
இதன் விளைவாக, இறக்காமத்தில் ரூ.3 கோடியே 65 இலட்சம் செலவில் முன்னெடுக்கப்படவுள்ள சுற்றுவட்டப் பாதை அபிவிருத்தித் திட்டமும் காலதாமதத்தை எதிர்கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், முன்னர் சங்கங்களுக்கு வழங்கப்பட்டிருந்த ரூ.5 மில்லியன் பெறுமதியிலான ஒப்பந்தப் பணிகளின் வரம்பு ரூ.2 மில்லியனாகக் குறைக்கப்பட்டதால், சங்கங்கள் ஒப்பந்தப் பணிகளைப் பெறுவதில் ஆர்வம் இழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனவே, உள்ளூர் சங்கங்களின் பங்களிப்பை அதிகரித்து அபிவிருத்திப் பணிகளை துரிதப்படுத்தும் வகையில், ஒப்பந்தப் பணிகளுக்கான வரம்பை மீண்டும் ரூ.5 மில்லியனாக உயர்த்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கே.எல்.எம். சமீம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தினார்.




