Ads Area

குவைத்தில் பாலைவனத்தில் கொடூரமான முறையில் புதைக்கப்பட்ட இந்தியர்: குற்றவாளியின் மகன் அதிரடி கைது!

குவைத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு காணாமல் போன இந்தியர் ஒருவர், பாலைவனப் பகுதியில் கொடூரமான முறையில் புதைக்கப்பட்டு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்த அதிர்ச்சி தரும் சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளில் ஒருவரை குவைத் குற்றப் புலனாய்வுத் துறை (CID) அதிரடியாகக் கைது செய்துள்ளது.


இந்த ஆண்டு மார்ச் 19, 2026 அன்று, சம்பந்தப்பட்ட இந்தியர் திடீரெனக் காணாமல் போனதாகக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த குற்றப் புலனாய்வுத் துறையினர் தீவிர விசாரணையில் இறங்கினர். முதற்கட்ட விசாரணையில், காணாமல் போன நபர் சம்பவம் நடந்த அன்று, கனரக உபகரணங்களைப் பழுதுபார்ப்பதற்காக அதன் உரிமையாளருடன் 'அல்-சல்மி' பாலைவனப் பகுதிக்குச் சென்றது தெரியவந்தது.


விசாரணையை முடுக்கிவிட்ட போலீஸார், அந்த முக்கியப் பாதையில் இருந்த போக்குவரத்து கண்காணிப்பு கேமராக்களை (CCTV) ஆய்வு செய்தனர். அதில், சல்மி பகுதிக்குச் செல்லும்போது வாகனத்தில் உயிரிழந்த நபரும், தற்போது கைது செய்யப்பட்டுள்ள நபரும் ஒன்றாக இருந்தது பதிவாகியிருந்தது. ஆனால், அதே வாகனம் திரும்பி வரும்போது கைது செய்யப்பட்ட நபர் மட்டுமே தனியாக காரை ஓட்டி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது போலீஸாருக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது.


இதற்கிடையே, இந்த விவகாரத்தில் தொடர்புடைய முதல் குற்றவாளி ஏற்கனவே குவைத்தை விட்டுத் தப்பி ஓடிவிட்டது தெரியவந்தது. இதையடுத்து, குவைத்தில் இருந்த அவருடைய மகனைப் பிடித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் உண்மையை ஒப்புக்கொண்டார்.


"பணியிடத்தில் கிரேண் (Crane) ஒன்று எதிர்பாராதவிதமாகச் சரிந்து விழுந்ததில் அந்த இந்தியர் உயிரிழந்தார். இந்த விபத்தினால் ஏற்படும் சட்டரீதியான பிரச்சினைகளைத் தவிர்க்கவும், உண்மையை மறைக்கவும் நானும் எனது தந்தையும் சேர்ந்து, அவரது உடலை யாருக்கும் தெரியாமல் பாலைவனத்திற்குக் கொண்டு சென்று புதைத்தோம்," என்று கூறினார்.


குற்றவாளி அளித்த தகவலின் பேரில், அவர் சடலத்தைப் புதைத்த அல்-சல்மி பாலைவனப் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு குற்றவியல் ஆதாரத்துறை, சாட்சியத்துறை மற்றும் தீயணைப்புத் துறையின் கூட்டுப் பாதுகாப்புடன், மணலில் புதைக்கப்பட்டிருந்த இந்தியரின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.


தற்போது கைது செய்யப்பட்டுள்ள நபர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டு, மேல் நடவடிக்கைக்காகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மேலும், நாட்டை விட்டுத் தப்பிய அவரது தந்தையைக் கைது செய்வதற்கான சர்வதேச சட்ட நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. உயிரிழந்த நபர் மற்றும் குற்றவாளிகள் இந்தியாவின் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe