கிழக்கு மாகாண மக்களின் நீண்டகாலத் தேவையை நிறைவு செய்யும் வகையில், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சகல வசதிகளையும் கொண்ட கண் சிகிச்சை விடுதி (EYE Ward) அடங்கிய பாரியதொரு கண் சிகிச்சை பிரிவு (EYE Unit) உருவாக்கப்படவுள்ளது. இதற்கான முதற்கட்ட பணிகளை மேற்கொள்ளவும், ஏனைய உட்கட்டமைப்பு அபிவிருத்திப் பணிகளுக்காகவும் அவ்வைத்தியசாலைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய காலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் தெரிவித்தார்.
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் புதிதாகப் புனரமைக்கப்பட்ட மருத்துவ விடுதியினை (Medical Ward) உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், கிழக்கு மாகாணத்தில் உள்ள மக்கள் கண் நோய் தொடர்பான சகல சிகிச்சை வசதிகளையும் தமது பிராந்தியத்திலேயே பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே எமது இலக்காகும். இதற்காக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அதிநவீன வசதிகளுடன் கூடிய கண் சிகிச்சை பிரிவு (EYE Unit) அமைக்கப்படவுள்ளது. இதற்கான ஆரம்பக்கட்ட ஏற்பாடுகள் மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும், இவ்வைத்தியசாலையின் மிக முக்கிய தேவைகளாகக் கருதப்படும் இரத்த சுத்திகரிப்பு பிரிவு (Dialysis Unit) மற்றும் பற்சிகிச்சை பிரிவு (Dental Unit) என்பவற்றுக்குத் தேவையான அத்தியாவசிய உபகரணங்களும், உட்கட்டமைப்புத் தேவைகளும் எதிர்வரும் காலங்களில் நிறைவேற்றப்படும். அதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
ஒரு வைத்தியசாலையில் எவ்வளவுதான் நவீன வசதிவாய்ப்புக்கள் மற்றும் கட்டடங்கள் இருந்தாலும், அங்கு சிகிச்சைக்காக வரும் நோயாளர்கள் மனத்திருப்தியடையும் வகையில் சேவைகள் அமைய வேண்டும்.நோயாளர் பராமரிப்பு விடயத்தில் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், ஊழியர்களின் சிறந்த பக்கவழக்கங்கள் நோயாளர்களுடனான சிறந்த தொடர்பாடல்களே வைத்தியசாலையின் தரத்தை மேலும் உயர்த்துகின்றன.
அரச நிதியை மாத்திரம் நம்பியிராது, வைத்திய அத்தியட்சகர் மற்றும் பொது வைத்திய நிபுணர் டொக்டர் சபீக் உள்ளிட்ட குழுவினர், தனவந்தர்கள் மற்றும் சமூக சேவையாளர்களின் உதவிகளைப் பெற்று, பழைய கட்டடமொன்றை மிக அழகிய முறையில் புனரமைத்து மருத்துவ விடுதியாக மாற்றியுள்ளனர். அதிகாரிகளின் இந்த அர்ப்பணிப்புடன் கூடிய மகத்தான பணியைப் பாராட்டிய பிராந்திய பணிப்பாளர், இதற்காகப் பேராதரவு வழங்கிய தனவந்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கும் தனது நன்றியினைத் தெரிவித்தார்.
வைத்திய அத்தியட்சகர் டொக்டர் டீ.பிரபாசங்கர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், விசேட வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள், வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர், நன்கொடையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். இதன்போது, மருத்துவ விடுதி புனரமைப்பிற்குப் பங்களிப்பு செய்த சகலரும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

