மொஹமட் சப்ரி.
ஒரு ஊரின் வரலாறு என்பது அதன் கட்டடங்களிலும் நிலங்களிலும் மட்டுமல்ல, அந்த ஊர் மக்களின் வட்டார மொழியிலும் உயிரோடு வாழ்கிறது. தலைமுறைகள் பேசிய சொற்கள் மறைந்து போனால், அந்த மக்களின் பண்பாட்டு கலாசார நினைவுகளும் மெல்ல மெல்ல அழிந்துவிடும் என்ற உயரிய நோக்கில், சம்மாந்துறையின் மொழி மற்றும் வாழ்வியலைப் பாதுகாக்கும் ஒரு வரலாற்று ஆவணம் தற்போது நூலாக வெளிவந்துள்ளது.
சம்மாந்துறையைச் சேர்ந்த பிரபல ஆய்வாளர் முஹம்மட் சாக்கீர் அவர்கள் பல ஆண்டுகால கடின உழைப்பின் மூலம் தொகுத்துள்ள "சம்மாந்துறை வட்டாரவழக்கு அகராதி (தமிழ் – தமிழ்)" என்னும் பெருநூல் அண்மையில் 'தாய்வீடு' பதிப்பகத்தின் மூலம் அச்சிடப்பட்டு வெளிவந்துள்ளது.
சுமார் 300 பக்கங்களைக் கொண்டுள்ள இந்த அரிய அகராதியில் 4400-க்கும் மேற்பட்ட தலைச்சொற்கள், ஆயிரக்கணக்கான விளக்கங்கள், பழமொழிகள் மற்றும் பிரயோகங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. கிழக்கு மாகாணத் தமிழர்களின் வட்டார மொழிச் செல்வத்தை மிகத் துல்லியமாகப் பதிவு செய்யும் இந்த நூல், சம்மாந்துறையின் மொழி, பண்பாடு, வாழ்வியல் ஆகியவற்றை வருங்கால சந்ததியினருக்காகப் பாதுகாக்கும் அரிய ஆவணமாகக் கருதப்படுகிறது.
பல்கலைக்கழகங்கள் அல்லது பெரிய ஆய்வு நிறுவனங்கள் கூட்டு முயற்சியாக மேற்கொள்ள வேண்டிய இத்தகைய மாபெரும் ஆய்வுப் பணியை, தனது அர்ப்பணிப்பாலும் பொறுமையாலும் தனியொரு மனிதனாக நின்று ஆய்வாளர் முஹம்மட் சாக்கீர் சாத்தியப்படுத்திக் காட்டியுள்ளார்.
இந்த நூலின் வெளியீட்டு விழா அண்மையில் சம்மாந்துறையில் மிக விமர்சையாக இடம்பெறவுள்ளது. இது வெறும் நூல் வெளியீடு மட்டுமல்லாமல், சம்மாந்துறையின் அடையாளம் ஆவணமாகும் ஒரு வரலாற்று நிகழ்வாகும்.
இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள நூலாசிரியரின் நெருங்கிய நண்பர்,
"சம்மாந்துறையைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வாசகர்கள் இந்த நூலை உங்களுடைய சொந்த நூலாகவும், ஊரின் பெருமையாகவும், பிள்ளைகளுக்கான பண்பாட்டுச் சொத்தாகவும் கருத வேண்டும். இந்த நூல் வெளியீடு ஒரு தனிநபரின் நிகழ்வாக இல்லாமல், ஊரே ஒன்று திரண்டு கொண்டாட வேண்டிய பண்பாட்டு விழாவாக அமைய வேண்டும்" என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இப்படியாக எமது வட்டார வழக்குச் சொற்களைப் பாதுகாப்பதன் ஊடாக, நாளை நமது சந்ததியினர் "சம்மாந்துறை மண் இப்படித்தான் பேசியது" என்று பெருமையுடன் சொல்ல முடியும்.
ஒவ்வொரு ஊரும் தத்தமது வட்டார மொழிச்செல்வத்தை ஆவணப்படுத்துவதற்கான ஒரு வலுவான அடித்தளத்தை ஆய்வாளர் முஹம்மட் சாக்கீர் இட்டுள்ளார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த அரிய முயற்சி மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும் எனப் பலரும் தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

