Ads Area

சமூக வலைத்தளங்களில் வைரலான காணொளி: சம்மாந்துறையில் போக்குவரத்து விதிகளை மீறிய இளைஞர்கள் மீது பொலிஸார் அதிரடி நடவடிக்கை!


மஜீட். ARM, றிகாஷ் எம். அலியார்.



​சமூக வலைத்தளங்களில் அண்மைக்காலமாகப் பகிரப்பட்டு வந்த காணொளி ஒன்றில், சம்மாந்துறை பகுதியில் சில இளைஞர்கள் தலைக்கவசம் அணியாமலும், ஒரு மோட்டார் சைக்கிளில் மூன்று மற்றும் நான்கு பேர் பயணித்தும், வீதியை மறித்து பொதுமக்கள் மற்றும் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆபத்தான முறையில் செயற்பட்டமை பதிவாகியிருந்தது.


​இந்தக் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, சம்மாந்துறை பொலிஸார் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்து, சம்பவத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள்களைக் கைப்பற்றியதுடன், போக்குவரத்து மற்றும் மோட்டார் வாகனச் சட்டங்களை மீறிய பல இளைஞர்களைக் கைது  நேற்று செய்துள்ளனர்.


​இந்த விசேட சுற்றிவளைப்பு மற்றும் சட்ட அமுலாக்க நடவடிக்கை, கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமையவும், அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவிற்கமையவும் முன்னெடுக்கப்பட்டது.


​அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி அவர்களின் வழிநடத்தலில், கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசாரின் நெறிப்படுத்தலில், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமாரவின் தலைமையில் இந்தக் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.


​இந்த அதிரடி சுற்றிவளைப்பு நடவடிக்கையில், சம்மாந்துறை பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி ஏ.டி.ஆர். விஜயவர்த்தன, குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி SI சமீர மற்றும் PCD 80294 தனுஷ்க ஆகியோரின் தலைமையிலான பொலிஸ் குழுவினர் ஈடுபட்டனர்.


​பொதுமக்களின் உயிர் மற்றும் சொத்துப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் வகையில் வீதிகளில் அசம்பாவிதங்களை ஏற்படுத்தும் இத்தகைய செயல்கள் எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப்பட மாட்டாது என்பதை இந்த நடவடிக்கை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


 சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பை நிசாந்த பிரதீப் குமார அவர்கள் ஏற்றதன் பின்னர், சட்டம் மற்றும் ஒழுங்கை உறுதிப்படுத்தும் வகையில் தொடர்ச்சியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

எதிர்காலத்திலும் இவ்வாறான சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் தயக்கமின்றி மேற்கொள்ளப்படும் என்பதை இச்சம்பவம் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe