சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியாவில் வசிக்கும் வெளிநாட்டுப் பணியாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு அந்நாட்டுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மிக முக்கியமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அதன்படி, வெளிநாட்டினர் அனைவரும் தங்களது குடியிருப்பு அனுமதி அட்டையான ‘இக்காமா’வை (Iqama) எப்போதும் தங்களுடன் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சட்ட அமலாக்கப் பிரிவினர் திடீர் சோதனைகளில் ஈடுபடும் போது, தங்களின் அசல் இக்காமா அட்டையையோ அல்லது மொபைல் செயலி மூலமாக டிஜிட்டல் இகாமாவையோ உடனடியாகக் காண்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கடுமையான தண்டனை விபரங்கள்:
அதிகாரிகள் கேட்கும் போது இகாமாவைச் சமர்ப்பிக்கத் தவறினால், கடுமையான சட்ட நடவடிக்கைகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதன் விபரங்கள் பின்வருமாறு:
அபராதம்: விதியை மீறுபவர்களுக்கு 3,000 சவுதி ரியால் (SAR) வரை அபராதம் விதிக்கப்படும்.
சிறை தண்டனை: அபராதத்துடன் 6 வாரங்கள் வரை சிறைவாசம் அனுபவிக்க நேரிடலாம்.
முக்கிய அறிவுறுத்தல்:
சவுதியில் உள்ள வெளிநாட்டினர் வீட்டை விட்டு வெளியேறும் போது தங்களது இக்காமா அட்டையை (அசல் அல்லது டிஜிட்டல் வடிவம்) எப்போதும் உடன் வைத்திருப்பதை உறுதி செய்து கொள்ளுமாறு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

