சம்மாந்துறை ஹிஜ்ரா பொதுச் சந்தையின் பயன்பாடற்ற மேல்மாடி அறைகளைத் தங்குமிட விடுதிகளாக மாற்றி, பிரதேச சபையின் வருமானத்தை அதிகரிப்பதற்கான ஆக்கபூர்வமான திட்டமொன்று பிரதேச சபையின் 5ஆவது சபையின் 14ஆவது அமர்வில் பிரதேச சபை கெளரவ பிரதேச சபை உறுப்பினர் காலித் அவர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.
சபையின் தவிசாளர் தலைமையில் நேற்று (06) நடைபெற்ற இந்த அமர்வில் உரையாற்றிய கெளரவ பிரதேச சபை உறுப்பினர் காலித் அவர்கள் , சம்மாந்துறை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஹிஜ்ரா பொதுச் சந்தையானது பிரதேச சபைக்குச் சொந்தமான பிரதான சொத்தாக இருந்தபோதிலும், அதன் மேல்மாடி முழுமையான பயன்பாட்டில் இல்லை எனச் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய நிலையினால் ஏற்படும் சவால்கள்
சந்தையின் மேல்மாடிக்கு வாடிக்கையாளர்களின் வருகை குறைவாக இருப்பதால், உள்ளூர் வர்த்தகர்கள் சிலர் தமது வியாபாரப் பெயர்ப்பலகைகளை மாத்திரம் காட்சிப்படுத்திவிட்டு, அந்த அறைகளை வெறும் களஞ்சியங்களாகவே (Store Rooms) பயன்படுத்தி வருகின்றனர். இதனால் வர்த்தகர்களுக்குப் போதிய வியாபாரம் இன்மையோடு, பிரதேச சபைக்கும் கிடைக்க வேண்டிய உண்மையான பொருளாதாரப் பயன் கிடைக்காமல் போவதாகத் தெரிவிக்கப்பட்டது.
திட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்கள்
சம்மாந்துறை நகரம் வணிக ரீதியாகப் பெரும் வளர்ச்சி கண்டு வரும் நிலையில், தினமும் வெளிப்பிரதேசங்களிலிருந்து ஏராளமான விற்பனைப் பிரதிநிதிகள் மற்றும் நிறுவனங்களின் அதிகாரிகள் வருகை தருகின்றனர். இருப்பினும், அவர்கள் தங்குவதற்கான தரமான வசதிகள் நகரில் மிகக் குறைவாகவே உள்ளன.
இதனைக் கருத்திற் கொண்டு, மேல்மாடி அறைகளை அடிப்படை வசதிகளுடன் கூடிய தங்குமிடங்களாக மாற்றி, நாளாந்த வாடகை அடிப்படையில் இயக்குவதன் மூலம் பின்வரும் நன்மைகளைப் பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது:
பாதுகாப்பான தங்குமிடம்:
பொது மக்களுக்கும், வெளிப்பிரதேச அதிகாரிகள், தேவையுடையோர் என அனைவருக்கும் சுத்தமான, பாதுகாப்பான தங்குமிட வசதி கிடைக்கும்.
பிரதேச சபைக்கு மேலதிக வருமானம்:
பூட்டிக்கிடக்கும் அறைகள் மூலம் சபைக்கன மாதாந்த வருமானம் பல மடங்கு அதிகரிக்கும்.
பொருளாதார வளம்:
பயன்பாடற்ற பொதுச் சொத்து, நகருக்குப் பயன்படும் பொருளாதார வளமாக மாறும்.
சாத்தியக்கூறு ஆய்வு கோரிக்கை
தற்போதுள்ள வாடகைதாரர்களுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாத வகையில், இத்திட்டத்தின் சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கு உடனடி தொழில்நுட்ப மற்றும் நிதி ரீதியான ஆய்வொன்றை (Feasibility Study) அதிகாரிகளைக்கொண்டு மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு குறித்த பிரேரணைக்கு சகல உறுப்பினர்களாலும் ஆதரவும் வழங்கப்பட்டுள்ளது.

