பாறுக் ஷிஹான்.
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்லிகைத்தீவு மற்றும் மல்வத்தை ஆகிய பகுதிகளில் சூட்சுமமான முறையில் இயங்கி வந்த இரு சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையங்கள் புதன்கிழமை (05) சம்மாந்துறை பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளன.
சம்மாந்துறை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசியத்தகவலின் அடிப்படையில் இச்சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இச்சோதனை நடவடிக்கையின் போது மல்வத்தை மல்வத்தை –கணபதிபுரம் பாடசாலை முன்பகுதியில் கசிப்பு தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 1 இலட்சம் மில்லி லீற்றர் கோடா கைப்பற்றப்பட்டதுடன், 57 வயதுடைய சந்தேகநபரும் கைது செய்யப்பட்டார்.
அதேபோன்று, மல்லிகைத்தீவு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 5 கேன்களில் அடைக்கப்பட்டிருந்த 1 இலட்சம் மில்லி லீற்றர் கோடாவுடன் 43 வயதுடைய பெண் சந்தேகநபரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்முனைப்பிராந்திய உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அசாரின் ஆலோசனைக்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப்குமாரவின் நேரடி வழிகாட்டலில், ஊழல் ஒழிப்புப்பிரிவுப்பொறுப்பதிகாரி என். ரிபாய்டீன் ,போக்குவரத்து பிரிவுப்பொறுப்பதிகாரி விஜேவர்தன, பொலிஸ் சார்ஜன்ட்களான அசோக (43940), அனுர (63715), பொலிஸ் கான்ஸ்டபிள் நிரஞ்சன் (90096) மற்றும் பெண் பொலிஸ் சார்ஜன்ட் நிலாந்தி (2472) ஆகியோர் பங்கேற்றிருந்த பொலிஸ் குழு இச்சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும் கைப்பற்றப்பட்ட சான்றுப்பொருட்களும் சட்ட நடவடிக்கைகளுக்காகச் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




