Ads Area

சம்மாந்துறையில் பொது இடங்களில் கழிவுகளைக் சட்டவிரோதமாக வீசும் நபர்களை அடையாளம் காண CCTV பொருத்த தீர்மானம்.


சம்மாந்துறை அன்சார்.


சம்மாந்துறை பிரதேச சபையின் ஐந்தாவது கூட்டத் தொடரின் பதின்நான்காவது மாதாந்த அமர்வில், பிரதேசத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பொதுச்சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் சம்மாந்துறைப் பிரதேச சபை உறுப்பினர் றிஸ்விகான் அவர்களால் முன்வைக்கப்பட்ட முக்கிய பிரேரணை இன்று 2026-08-06 ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.


சம்மாந்துறை பிரதேச சபைக்குட்பட்ட மக்கள் செறிவாக வாழும் பல பகுதிகளில், சிலர் தங்களது வீடுகள் மற்றும் சமையலறைக் கழிவுகளை வீதிகளிலும் பொது இடங்களிலும் சட்டவிரோதமான முறையில் கொட்டி வருவது தொடர்ச்சியாக அவதானிக்கப்பட்டு வருகிறது.


இத்தகைய சட்டவிரோத செயல்களைக் கட்டுப்படுத்த பிரதேச சபையினால் பல்வேறு சந்தர்ப்பங்களில் எச்சரிக்கை மற்றும் அறிவுறுத்தல் பதாகைகள் (Signboards) காட்சிப்படுத்தப்பட்ட போதிலும், சிலர் தொடர்ந்து குப்பைகளைக் கொட்டிச் செல்வதால் அப்பகுதிகளில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், பொதுச்சுகாதாரமும் சுற்றுச்சூழலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன.


இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாணும் வகையில், குப்பை கொட்டப்படும் முக்கிய தெரிவு செய்யப்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை (CCTV) பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.


இக்கண்காணிப்பு கேமராக்கள் மூலம் சட்டவிரோதமாகக் கழிவுகளைக் கொட்டும் நபர்களைத் துல்லியமாக அடையாளங்காண முடிவதுடன், அவர்களுக்கு எதிராகத் தகுந்த சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் இச்செயற்பாட்டைக் முற்றாகத் தடுக்க முடியும் என சபை உறுப்பினர் றிஸ்விகான் தனது பிரேரணையில் சுட்டிக்காட்டியிருந்தார்.


சபையில் சமர்ப்பிக்கப்பட்ட இக்கோரிக்கை குறித்து விரிவாக ஆராயப்பட்டு, அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe