Ads Area

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் கசிப்பு விற்பனை அதிகரிப்பு ; பொலிஸார் தீவிர நடவடிக்கை

 பாறுக் ஷிஹான்.


சட்டவிரோதமான முறையில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த 37 வயதுடைய நபரொருவர் வெள்ளிக்கிழமை (😎 அதிகாலை பொலிஸாரால் அதிரடியாகக்கைது செய்யப்பட்டுள்ளார்.


சம்மாந்துறை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், சம்மாந்துறை, ஜமாலியா பாடசாலை வீதிக்கருகில் அதிகாலை நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 


இதன்போது, விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 5 கேன்கள் கொள்ளளவு கொண்ட 25 கசிப்பு போத்தல்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.


அம்பாறை மாவட்ட பிரதிப்பொலிஸ் மாஅதிபர் சுஜித் வேதமுல்லவின் மேற்பார்வையில், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராச்சி   ஆலோசனையிலும், கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அசார் அவர்களின் நெறிப்படுத்தலிலும் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.


சம்மாந்துறை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என்.நிசாந்த பிரதீப் குமாரவின் நேரடி வழிகாட்டலில், ஊழல் ஒழிப்புப்பிரிவுப்பொறுப்பதிகாரி என்.ரிபாய்டீன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இச்சுற்றிவளைப்பை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர்.


அண்மைக்காலமாக சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் கசிப்பு விற்பனை அதிகரித்து வரும் நிலையில், அதனை முற்றிலும் ஒழிப்பதற்குப் பொலிஸார் தீவிர நடவடிக்கையெடுத்து வருகின்றனர். 


கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe