வீரமுனை இராமகிருஷ்ண மஹா வித்தியாலயத்தின் கல்விப் பயணத்தில் மேலும் ஒரு சாதனைப் படிக்கல்லாக, இம்முறை நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் பாடசாலையைச் சேர்ந்த 7 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
மேலும், பரீட்சைக்குத் தோற்றிய 43 மாணவர்களும் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று 100 வீத சித்தியை பதிவு செய்துள்ளமை பாடசாலையின் கல்வி வரலாற்றில் குறிப்பிடத்தக்க சாதனையாக அமைந்துள்ளது.
இச்சிறப்பான பெறுபேற்றுக்கு காரணமாக அமைந்த பாடசாலையின் அதிபர் திருமதி. கௌ. கணேஸ்வரன், தரம் 5 பொறுப்பாசிரியர் திரு. ப. றசிகரன், ஆசிரியை திருமதி. அ. வசந்தகுமார் உள்ளிட்ட ஆரம்பப் பிரிவு ஆசிரியர்கள், சித்தியடைந்த மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் என அனைவருக்கும் பாடசாலை நிர்வாகம் சார்பில் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை கருத்திற்கொண்டு அவர்களுக்காக விசேட வகுப்புகளை ஏற்பாடு செய்து நடத்திய வீரமுனை சிந்தா யாத்திரை பிள்ளையார் ஆலய பரிபாலன சபையினருக்கும் பாடசாலை அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் சார்பில் மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
புலமைப்பரிசில் பரீட்சையில் வெற்றி பெற்ற மாணவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு 2026.09.07 அன்று பாடசாலையின் காலை ஆராதனை நிகழ்வின்போது, பாடசாலை அதிபர் திருமதி. கௌ. கணேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் திரு. பூ. பரமதயாளன், பிரதிக் கல்விப் பணிப்பாளர் (கல்வி அபிவிருத்தி மற்றும் பாடசாலை மேம்பாட்டு உத்தியோகத்தர்) உள்ளிட்டோர் கலந்துகொண்டு, சாதனை படைத்த மாணவர்களைப் பாராட்டி கௌரவித்தனர்.
மேலும், இந்நிகழ்வுக்கு அனுசரணை வழங்கிய வீரமுனை சிந்தா யாத்திரை பிள்ளையார் ஆலய பரிபாலன சபையினர், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் மற்றும் பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் பாடசாலை அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகம் சார்பில் மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.
வீரமுனை இராமகிருஷ்ண மஹா வித்தியாலயத்தின் இந்தச் சிறப்பான கல்விச் சாதனை, மாணவர்களின் அர்ப்பணிப்பு, ஆசிரியர்களின் வழிகாட்டல், பெற்றோரின் ஒத்துழைப்பு மற்றும் சமூகத்தின் ஆதரவு ஆகியவற்றின் ஒருங்கிணைந்த வெற்றியாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

