சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஓ.எல். அமீர் அஜ்வாத், சவுதி அரேபியாவின் சட்டங்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி அமைச்சர் மிஷால் பின் அலி அல்-பலாவி அவர்களை ரியாத்தில் உள்ள சவுதி நீதித்துறை அமைச்சில் சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பின்போது, நீதித்துறை மற்றும் சட்ட ஒத்துழைப்பு தொடர்பான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருதரப்பினரும் கலந்துரையாடியதுடன், இத்துறைகளில் ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்வதற்கான தங்களது உறுதிப்பாட்டையும் மீண்டும் வலியுறுத்தினர்.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர ஆர்வமுள்ள விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக, தண்டனை பெற்ற நபர்களை பரிமாறிக்கொள்வது (Transfer of Sentenced Persons) மற்றும் பரஸ்பர சட்ட உதவி (Mutual Legal Assistance) தொடர்பாக இலங்கை மற்றும் சவுதி அரேபியா இடையே மேற்கொள்ளப்பட்டு வரும் இருதரப்பு ஒப்பந்தங்களை விரைவாக இறுதி செய்வதற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது.
இந்த சந்திப்பில், ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தின் இரண்டாம் செயலாளர் மற்றும் அலுவலகத் தலைவரான திருமதி தமித்ரி சமங்கிகா மற்றும் சஜீத் ஆகியோரும் தூதுவர் அமீர் அஜ்வாத் அவர்களுடன் கலந்து கொண்டனர்.
இலங்கைத் தூதரகம் – ரியாத்
19 செப்டெம்பர் 2026


