"கிளீன் சிறிலங்கா" தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், தூய்மையான நாட்டிற்கான தேசிய மக்கள் பணியாக முன்னெடுக்கப்பட்ட "அத்தம" தேசிய தூய்மைத் தினத்தின் சம்மாந்துறை பிரதேசத்திற்கான பிரதான நிகழ்வு இன்று (19) உடங்கா-01 கிராம சேவகர் பிரிவில் சிறப்பாக இடம்பெற்றது.
வீரமுனை (1, 2, 3, 4) மற்றும் சம்மாந்துறை (6, 8, 12) ஆகிய கிராம சேவகர் பிரிவுகளை மையப்படுத்தி நடைபெற்ற இந்நிகழ்வு, சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மது ஹனீபா அவர்களின் தலைமையில் உடங்க கிராம சேவகர் பிரிவில் பிரதான வீதியில் காலை 8.00 மணிக்கு ஆரம்பமானது.
இதில் அம்பாறை மாவட்ட திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சள ரத்னாயக்க பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
அரசாங்கத்தின் கொள்கைத் திட்டமான ‘க்ளீன் ஸ்ரீ லங்கா’ திட்டத்தை மக்களின் இதயங்களுக்குக் கொண்டு சேர்த்து வெற்றியாக்குவதற்கான சமூகத் தத்துவமாக "அத்தம" பார்க்கப்படுகிறது. இலங்கையின் பாரம்பரிய சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பில் இலாப நோக்கற்ற, கூட்டு உழைப்புப் பரிமாற்ற முறையைக் குறிக்கும் இந்த உன்னத வழக்கத்தின்படி, பணப் பரிமாற்றம் இல்லாமல் மக்கள் தங்களுக்குள் உடல் உழைப்பைப் பகிர்ந்துகொண்டு இத்தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம். மாஹீர், உதவி பிரதேச செயலாளர் வி. வாசித் அஹமட், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிஷாந்த பிரதீப் குமார, சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் நிஸ்ரின் சியாத், பிரதேச சபை உறுப்பினரும் 'கிளின் ஸ்ரீலங்கா' நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளருமான வை.பி.எம். நவாஸ்,முப்படை மற்றும் பொலிஸ் பிரதிநிதிகள், பிரதேச சபை உறுப்பினர்கள், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக அபிவிருத்தி சபை உறுப்பினர்கள், பிரதேச செயலக மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது, சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட 04 இடங்களில் பல்வேறு சிரமதானப் பணிகள், கழிவுகளை அகற்றும் தூய்மைப் பணிகள், மரக்கன்று நடுதல் மற்றும் வீதி புனரமைப்புப் பணிகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டன.
அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கமைய, ஒவ்வொரு மாதமும் வருகின்ற மூன்றாம் வாரத்தின் சனிக்கிழமைகளில் இந்த "அத்தம" நிகழ்வு தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






