குவைத்தில் வீட்டு ஓட்டுநர் என்ற போர்வையில் போதைப்பொருள் விற்ற இலங்கையைச் சேர்ந்த இளைஞரான ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஃபர்வானியா மாகாணத்தில் உள்ள சபா அல் நாஸ்ர் புலனாய்வுத்துறை குவைத்தி ஒருவருடைய வீட்டில் ஓட்டுநராகப் பணிபுரிந்த அந்த நபரைக் கைது செய்தனர். இவர் அர்தியா பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்வதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
முக்கியமாக வாகனத்தில் தனது முதலாளியின் குடும்பத்தினரை ஏற்றிச் செல்லும்போது கூட அவர் போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்தார் என்பதை கண்காணிப்பு கேமராக்கள் காட்டியதாக அமைச்சகம் தெரிவித்தது. தனது வேலையின் தன்மையை தவறாகப் பயன்படுத்தி சோதனைகளில் இருந்து தப்பிப்பதே அவரது நோக்கமாக இருந்தது. அவரது வாகனத்தில் நடத்தப்பட்ட சோதனையின்போது, கிரிஸ்டல் மெத் அடங்கிய பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, அந்த நபரின் வாக்குமூலத்தின் அடிப்படையில், அவரது முதலாளியின் அனுமதியுடன் அவர் தங்கியிருந்த அறையில் நடத்தப்பட்ட சோதனையில் மேலும் போதைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. பல்வேறு அளவிலான பொட்டலங்கள் மற்றும் கவர்களில் விற்பனைக்காகத் தயாரிக்கப்பட்ட 469.1 கிராம் கிரிஸ்டல் மெத் மற்றும் 0.7 கிராம் கஞ்சாவுடன், போதைப்பொருட்களை எடைபோடப் பயன்படுத்தப்பட்ட ஒரு மின்னணு தராசு, 285.950 குவைத் தினார் மற்றும் 6,573 குவைத் தினாருக்கு போதை பொருட்கள் விற்பனை செய்ததற்கான ஆவணங்கள் இந்த சோதனையில் கண்டெடுக்கப்பட்டன.
இந்த போதைப்பொருள் விற்பனை வெளிநாட்டில் உள்ள மற்றொரு நபருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டதாகவும், விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்டவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் அமைச்சகம் கூறியுள்ளது. வீட்டுப் பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்களின் முதலாளிகள் மற்றும் குடும்பங்களின் உள்ளவர்கள் அவர்களுடைய செயல்பாடுகளைக் கண்காணிக்குமாறு ஸ்பான்சர்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியது. சட்டவிரோத நடவடிக்கைகளுக்காகத் தங்கள் வீடுகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்பதை உறுதி செய்யவும், சந்தேகத்திற்கிடமான எந்தவொரு நடத்தையையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவிக்கவும் அமைச்சகம் அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.





