Ads Area

ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி கண்டியில் பௌத்த பிக்குகள் பேரணி!

 



இலங்கையின் கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்திலிருந்து, வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரரின் பௌத்த துறவற ஆடைகள் அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவரை விடுதலை செய்யக் கோரியும் பௌத்த பிக்குகள் தலைமையிலான பேரணி சனிக்கிழமை (ஒக்டோபர் 10) ஆரம்பமானது.


பேரணி ஆரம்பமாவதற்கு முன்னர், கண்டியிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மகுல் மடுவ வளாகத்தில் விசேட மத வழிபாட்டு நிகழ்வொன்றும் இடம்பெற்றது.


இதன்போது உரையாற்றிய உலபனே சுமங்கல தேரர், ஞானசார தேரருக்கு எதிராக அரசாங்கம் தன்னிச்சையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகக் குற்றஞ்சாட்டி, அதனை வன்மையாகக் கண்டித்தார்.


நாடு, தேசம் மற்றும் பௌத்த மதத்தைப் பாதுகாப்பதற்காக ஞானசார தேரர் குரல் கொடுத்ததாகக் குறிப்பிட்ட அவர், வரலாற்றில் நாட்டுக்காகச் செயல்பட்ட வண. வாரியபொல ஸ்ரீ சுமங்கல தேரரின் பங்களிப்புடன் இதனை ஒப்பிட்டுப் பேசினார்.


ஸ்ரீ தலதா மாளிகை மற்றும் வண. வாரியபொல ஸ்ரீ சுமங்கல தேரரின் சிலைக்கு அருகிலிருந்து ஆரம்பமான இந்தப் பேரணி, ஞானசார தேரர் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்தை நோக்கி முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.


ஞானசார தேரர் விடுதலை செய்யப்படும் வரை இந்தப் போராட்டம் தொடரும் எனத் தெரிவித்த உலபனே சுமங்கல தேரர், பொதுமக்களும் அமைதியான முறையில் போராட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.


மூலம்: Newswire

தமிழில் - சம்மாந்துறை24




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe